தமிழர்களுடைய உரிமை மறுக்கப்படுவதற்கு தமிழ் தலைவர்களும் காரணமானார்களா?

ஆங்கிலேயர் இலங்கை நாட்டை கைப்பற்றுவதற்கு முன் ராஜரட்ட,மலாயரட்ட,ருகுணரட்ட என்றும்,பிற்காலத்தில் கோட்டை,கண்டி,யாழ்பாணம் என்ற மூன்று இராஜ்ஜிய பிரிவுகளாகவும் இலங்கை பரிபாலிக்கப்பட்டுவந்தது.


ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1833ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன். கொழும்பு என்கிற நிர்வாக மையத்துடன் இணைக்கப்பட்டது...


அன்றுதொட்டு சிங்களவரோ,தமிழரோ இந்தியாவை போன்று பூரண சுதந்தரம் வேண்டி இங்கே போராடவில்லை.
மாறாக ஆட்சி முறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்றும்,சட்டசபையில் திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென்றும் கேட்டார்களே தவிர,சுதந்திரம் வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.


இந்த நிலையில்;இலங்கை முழுவதும் ஒரே தேர்தல் தொகுதியாக கருதப்பட்டது,அந்த நேரம் படித்த இலங்கையர்,இலங்கை முழுவதற்கும் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்வதற்கு சாதகமாகப் படித்தவருக்கே வாக்குரிமை வழங்கப்பட்டது.  அக்காலத்தில் இலங்கை குடிசனத்தில் 4% மக்களுக்கே அன்று வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது.


1912இல் நடந்த தேர்தலில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளர் வைத்திய கலாநிதி மாக்கஸ் பர்ணாந்துவை தோற்கடித்து சேர் பொன்ராமநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
அவர்சிங்களவர்களுக்கும்,தமிழர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் சேர்த்து ஏகபிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார்.


பொன்ராமநாதன் அவர்கள் மூன்று இன மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும் 1915ல் நடந்த சிங்கள,முஸ்லிம் இனக்கலவரத்தில் சிங்கள மக்களின் பக்கமே சார்ந்து நின்றது மட்டுமல்ல,அந்த இனக்கலவரத்தை தூண்டியவர்கள் என்ற அடிப்படையில் ஆங்கில ஆட்சியாளர்களினால் சிறை பிடிக்கப்பட்ட சிங்கள தலைவர்களை இங்லாந்து சென்று மீட்டுவந்ததற்காக அவரை சிங்கள சமூகம் தோழ்மேல் வைத்து தூக்கிவந்தனர். அந்தளவு சிங்கள தமிழ் உறவு அந்த நேரம் வழுப்பட்டிருந்தது.


அதே நேரம் ஆங்கில ஆட்சியாளர்களிடமிருந்து அரசியல் சீர்திருத்தங்களை பெருவதில் மூன்று இன மக்களின் சார்பாக வாதாடியவர்தான் இந்த சேர் பொன்ராமநாதன் அவர்கள்.


அதன் நிமித்தம் 1833ல் கோல்புருக் ஆணைக்குழு மூலம் சில அதிகாரங்கள் கிடைத்தன.அதன்பின் 1921ல் மானிங் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பிற்பாடு1931ல் கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியல் யாப்பு சீர்திருத்தமே சிங்கள,தமிழ் இனவிரிசலுக்கு வித்திட்டது என்றால் மிகையாகாது.


உண்மையிலேயே கண்டிச் சிங்கள தலைவர்கள் தம்மை ஒரு தனிச்சமூகமாக கருதவேண்டுமென்றும்,சமஸ்டி அரசாங்கமே எங்களுக்கு வேண்டுமென்றும் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை வைத்தபோது,இலங்கைத் தமிழ் தலைவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்.


கண்டி சிங்களவர்,தம் சமூகத்துக்கு ஒரு சமஷ்டி ஆட்சிதான் சிறந்தது என்ற கோரிக்கையை கமிஷனர்கள் முன் முன்வைத்தபோது,தமிழ் தலைவர்கள் தமிழ் சமூகத்தை ஒரு தேசிய இனமாகக் கருதாமல் தம்மை ஒரு வகுப்புவாத சமூகமாகக் கருதியதற்கு அவர்களுடைய உயர்மட்ட வர்க்க உணர்வுதான் காரணம் என்று தன்னுடைய "விடுதலை போராட்டம்"என்ற நூலில் சச்சி பொன்னம்பலம் அவர்கள் எழுதியுள்ளார்கள்.


அவர்கள் சிறுபாண்மை இனத்தின் உரிமைக்காக போராடினாலும்,ஒரு சமஷ்டி ஆட்சியில் தமிழர் சமூகத்துக்கு ஒரு தேசிய இடத்தைப் பெறத் தவறிவிட்டார்கள். என்பதில் சந்தேகம் இல்லை.


1944ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி,தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று பிரகடனம் செய்த போதுகூட தமிழ் தலைவர்கள் இதன் முக்கியத்துவத்தை அன்று உணர தவறிவிட்டனர்.


ஒரு தலைமைத்துவத்திக்கு தீர்க்கதரிசன பார்வை இருக்கவேண்டும்.அப்படி அவர்களுக்கு இருந்திருந்தால் பிரித்தானியா அரசாங்கத்திடமிருந்து சமஷ்ட்டி ஆட்சியை எப்பொழுதோ பெற்றிருப்பார்கள்..


தமிழ் தலைவர்கள் ஏன் இப்படி நடந்தார்கள் என்பதற்கு அவர்களுடை அரசியல் பொருளாதாரப் பின்னணி மாத்திரமல்ல சமூகப் பின்னணியும் ஒரு முக்கிய காரணம்.
சர்வஜன வாக்குரிமை பாமர மக்களுக்கு வழங்கப்படகூடாது என்று வாதாடிய ராமநாதனும், மற்றும் பழமை பேண் வாதிகளும் வெள்ளாள சாதி அல்லாத சாதியினருக்கும்,பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது கும்பலாட்சிக்கு இடம் கொடுக்கும் பாரிய பிழை என்று வாதிட்டனர்.


இராமநாதனோ அவ்வாறு வாக்குரிமை வழங்குவது இந்த வாழ்க்கை முறைக்கு பழிகேடு விளைவிப்பது என்று கருதினார் என்று,ஜோன் றசல்,தனது "டொனமூர் சட்ட அமைப்பில் வகுப்புவாத அரசியல்"என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.அதே நேரம் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களும் தனது "யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல்" என்ற நூலில் கூறியுள்ளார். இவர்கள் இப்படி நடந்து கொண்டதற்கு இவர்களின் சமூகப் பின்னணிதான் காரணம் என்று கூறப்படுகின்றது.


அதே நேரம் சிங்கள தலைவர்களில் ஒருவரான பண்டாரநாயக்கா,கண்டி சிங்கள மக்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும்,இலங்கையில் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டுமானால் ஒரு சமஸ்டி அரசாங்கம் நிறுவப்படவேண்டும் என்றும் வாதாடினார். அவர் அப்படி கோரியதற்கு காரணம் கரையோர சிங்களவர்களுடன்,கண்டி சிங்களவர்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற பாகுபாடும் அதேநேரம் கண்டி சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு ஆங்கிலேயர்களுக்கு துணைபோனது கரையோர சிங்களவர்கள்தான் என்ற மனப்புண்ணும் அந்த நேரத்தில் கண்டிச் சிங்கள தலைவருகளுக்கு இருந்தது ஒருகாரணமாகும்.


இப்படியான சந்தர்ப்பங்களை தமிழ் தலைவர்கள் பயன்படுதியிருந்தால் இன்று இந்தளவு பிரச்சினைகள் வந்திருக்காது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.


அதன்பிற்பாடு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 50:50 கோட்பாடு தோல்வி அடைந்ததன் பின்னனி என்ன?


பொன்னம்பலம் அவர்கள், பிரஜா உரிமைச் சட்டத்தை எதிர்த்தவர் பிறகு ஏன் ஆதரித்து வாக்களித்தார்.


அதனை எதிர்த்து தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சமஷ்டி கட்சியினை 1949ல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஏன் ஆரம்பித்தார்?


அதன் பின் தமிழர் விடுதலை கூட்டணி தோற்றம் பெற்று எதை சாதித்தது?


தமிழர்களின் ஆயுத போராட்டம் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம்?போன்ற விடயங்கள் தொடர்ந்து வரும்..


ஆக்கம்
எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment