தௌஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அறிக்கை விடும் 23 அமைப்பை சேர்ந்தவர்கள் சமுதாயத்திற்காக சாதித்தது என்ன?

பொது பல சேனாவுக்கு எதிராக தௌஹீத் ஜமாஅத் பேசுகிறது என்பதை கண்டித்து நேற்றைய தினம் இலங்கையின் 23 முஸ்லிம் அமைப்புகள் (தௌஹீத் ஜமாஅத் – SLTJ தவிர) இணைந்து ஒரு அறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளன.

இந்த அமைப்புகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் நாம் தெளிவான சில செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்.

23 அமைப்புகள் இன்று இணைந்ததைப் போல் இதற்கு முன்பாகவும் இணைந்து இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த அத்தனை அறிக்கைகளும் தௌஹீத் ஜமாஅத் என்கிற ஒரு அமைப்புக்கு எதிராக வெளியிடப் பட்டவைகள் தான். மற்றபடி பொது பல சேனாவை கண்டித்து எந்த அறிக்கையுமோ அல்லது ஞானசார தேரரை கண்டித்து எந்த அறிக்கையுமோ இவர்கள் இது போல் கூட்டு சேர்ந்து 23 அமைப்புகள் வெளியிட்டதில்லை.

இதற்கு காரணம் என்ன?

இவர்களின் நோக்கம் என்ன?

இவர்கள் இதனால் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்?

தௌஹீத் ஜமாஅத் என்கிற அமைப்பு கடந்த 03.11.2016 அன்று கொழும்பில் GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து ஆயிரக் கணக்கான மக்களை ஒன்று சேர்த்து மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்றைய தினமும் (11.11.2016) சம்மாந்துரை நகரிலும் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தௌஹீத் ஜமாஅத் நடத்தியது. இந்த ஆர்பாட்டங்களின் பின்னர் தான் GSP+ சலுகைக்காக தனியார் சட்ட திருத்தம் செய்யக் கூடாது என்று உலமா சபை கூட அறிக்கை விட்டுள்ளது. அதுவும் வெரும் அறிக்கை மாத்திரமே அன்றி வேறு எந்த நகர்வும் இல்லை.

இன்று தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விட்ட 23 அமைப்புகள் கூட GSP+ சலுகைக்காக தனியார் சட்ட திருத்தம் செய்யக் கூடாது என்று கோரி எந்த ஆர்பாட்டத்தை செய்யவும் இல்லை. எந்தவொரு அறிக்கை கூட விட வில்லை. நிலைமை இவ்வாறிருக்கும் போது தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விடுவதற்கு மாத்திரம் இவர்கள் ஒன்று சேர்வது ஏன்?

ஒன்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் GSP+ க்காக கை வைப்பதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் குரல் கொடுக்கும் தௌஹீத் ஜமாஅத்தை போன்ற அமைப்புகளுக்கு துணையாக இருக்க வேண்டும். துணையாக இல்லா விட்டாலும் பரவாயில்லை. மௌனமாகவாவது இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் விட்டு விட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைப்பவர்களை எதிர்த்து ஆர்பாட்டம் செய்யும் தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விட்டு இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? அல்லது யாதை திருப்திப் படுத்த நினைக்கிறார்கள்?

அரசாங்கத்தையா? ஐரோப்பிய ஒன்றியத்தையா? அல்லது அல்லாஹ்வை கேவலப்படுத்தும் பொது பல சேனாவையா? யாருக்காக தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து இந்த அறிக்கை?

இன்றும் சரி என்றும் சரி முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் வந்த போதெல்லாம் தைரியமாக முன் வந்து முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தது தௌஹீத் ஜமாஅத் தான் என்பதை மனசாட்சி உள்ள யாரும் மறுக்க முடியாதே!

யார் எந்த அமைப்பையும் சார்ந்திருக்கலாம் ஆனால் நல்லவைகள் யார் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விட்ட இந்த 23 அமைப்புகள் இது வரை என்ன சாதித்தார்கள்? இந்த சமுதாயத்திற்கு இவர்களினால் நடந்த நன்மைகள் என்ன? இவர்கள் செய்த நல்லவைகளையும் தௌஹீத் ஜமாஅத் செய்தவற்றையும் உரசிப் பாருங்கள் அப்போது யார் இந்த சமுதாயத்திற்காக பாடுபடுபவர்கள் என்பது தெரியும்.
தம்புள்ளை பள்ளி உடைக்கப்பட்டது அப்போதும் இவர்கள் வெரும் அறிக்கை போராளிகளாகவே இருந்தார்கள்.

ஆனால் தௌஹீத் ஜமாஅத் பள்ளி உடைப்புக்கு எதிராக கொழும்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது.

இனசென்ஸ் ஒப் முஸ்லிம் – என்ற பெயரில் நபியவர்களை கேவலப்படுத்திய திரைப்படம் வெளியிடப்பட்டது அப்போது இவர்கள் மௌனம் காத்தார்கள்.
தௌஹீத் ஜமாஅத் அதற்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டத்தை கொழும்பில் நடத்தியது.

பலஸ்தீன் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள் அந்த நேரம் இந்த 23 அமைப்புகள் எங்கிருந்தன. எந்த திருமண விருந்தில் இருந்தார்கள்?

தௌஹீத் ஜமாஅத் மாபெரும் ஆர்பாட்டத்தை அறிவித்து நடத்தியது. இறுதியில் நடந்தது என்ன? இஸ்ரேலுக்கு எதிராக அப்போதைய மஹிந்த அரசு உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தது.

அது மட்டுமா? ஆர்பாட்டம் நடந்து வெரும் 2 மணித்தியாளங்களில் 10 மில்லியன் பலஸ்தீனத்திற்கு இலங்கை வழங்கும் என்று அப்போதைய இலங்கை அரசு அறிவித்தது.

இதற்கெல்லாம் யார் காரணம் 23 அமைப்புகளா? அல்லது தௌஹீத் ஜமாஅத் என்கிற ஒரு அமைப்பா?

இன்றும் இலங்கையில் இரத்த தானத்தில் முதல் இடத்தில் இவ்வமைப்பே இருக்கிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் பல இடங்களில் இவ்வமைப்பின் இரத்த தான முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த 23 அமைப்பில் எத்தனை அமைப்புகள் இரத்த தானத்தில் தௌஹீத் ஜமாஅத்தின் அளவுக்கு முன்னிற்கிறார்கள்?

அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது ஒரு இரத்த தானத்தை செய்வது. அதிலும் இந்த 23 அமைப்பில் சில அமைப்புகளின் கருத்துப்படி இரத்த தானம் செய்வது ஹராம். இந்த நிலையில் இருந்து கொண்டு தௌஹீத் ஜமாஅத்தை எதிர்த்து அறிக்கை விடலாமா?

நாட்டின் சக வாழ்வு பற்றி இவர்கள் தங்கள் அறிக்கையில் பேசியிருக்கிறார்கள்.

இந்த சக வாழ்வு விஷயத்தில் இவர்கள் என்ன முன்னெடுப்புகளை செய்தார்கள்? சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் செய்திகளை இவர்கள் கொண்டு சேர்த்தார்களா? அதற்கு இவர்கள் செய்த முயற்சி என்ன?
தௌஹீத் ஜமாஅத் சிங்கள் மக்கள் மத்தியில் இஸ்லாத்தை கொண்டு சேர்ப்பதற்கு செய்யும் முயற்சியில் 10 வீதத்தையாவது இவர்கள் செய்தார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். இவ்வாறான நிலையில் இவர்கள் எப்படி தௌஹீத் ஜமாஅத்தை குறிவைத்து அறிக்கை விட முடியும்?

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நாட்டின் பல பாகங்களிலும் இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான பதில்களை இவர்கள் முன்வைத்து வருகிறார்கள். சிங்கள மக்கள் மத்தியில் இது கடும் வரவேற்பைப் பெற்றுள்ளது.கடந்த வருடம் கொழும்பில் சிங்கள மொழியில் அல்-குர்ஆன் மொழியாக்கத்தை வெளியிட்டதின் மூலம் சிங்கள் மக்கள் மத்தியில் குர்ஆனின் செய்திகளை கொண்டு சேர்க்க பெரிதும் பாடுபட்டார்கள். குர்ஆனின் மொழியாக்கம் மாத்திரமன்றி சுமார் 500க்கும் அதிகமான விளக்க குறிப்புகளையும் அதில் இணைத்திருக்கிறார்கள். இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் அனைத்து குற்றச்சாட்டுக்குமான பதில்கள் அதில் அடங்கப் பெற்றிருக்கின்றன. தினமும் கிளைகள் மூலம் அரச அதிகாரிகள் முதல் சாதாரண மாற்று மத பொது மக்கள் வரை சிங்கள குர்ஆனை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அறிந்த வரை இதுவரைக்கும் சிங்கள மொழி பேசும் மக்களுக்கு தெளிவு படுத்தும் விதமான சுமார் 18 க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஆகவே, சக வாழ்வு பற்றிய அறிக்கைகளை மாத்திரம் வெளியிட்டு விட்டு தௌஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பேசி விட்டோம் என்ற நிம்மதி பெருமூச்சு விடுவதினால் இந்த சமுதாயத்திற்கு எந்த நலவும் ஏற்படப் போவதுமில்லை. உங்கள் அறிக்கைகளினால் அவர்களின், தௌஹீத் ஜமாஅத்தினரின் பயனத்தில் தடை ஏற்படப் போவதுமில்லை.

மாறாக நீங்கள் யார்? என்பதை இப்போது சாதாரண மக்கள் புரிந்து கொண்டார்கள். உங்கள் இயக்கம் சார்ந்த ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் உங்கள் அறிக்கையை ஆரோக்கியமானதாக சொல்ல வில்லை.

வெரும் அறிக்கை போராளிகளாக மாத்திரம் இராது 23 அமைப்புகளும் சேர்ந்து முடிந்தால் GSP+ சலுகைக்காக அரசு முஸ்லிம் தனியார் சட்டத்தில் கை வைப்பதை எதிர்த்து போராடுங்கள். தௌஹீத் ஜமாஅத்திற்கு முறையாக ஆர்பாட்டம் செய்யத் தெரியாது என்று பேசுவதை விடுத்து இந்தப் பிரச்சினையில் 23 அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு ஆர்பாட்டத்தை முறைப்படி செய்து காட்டுங்கள். உங்கள் ஒற்றுமையும், பலமும் இவ்வுலகுக்கே வெளிப்பட்டு விடும்.

தம்மால் முடியாத ஒன்றை இன்னொருவனால் செய்ய முடியும் என்றால் அதனால் சமுதாயத்திற்கு நலவுகள் கிடைக்கிறது என்றால் இயக்க வேறுபாட்டை தவிர்த்து அதனை ஆதரியுங்கள் இல்லையென்றால் எதிர்த்து கருத்து சொல்கிறோம் என்ற பெயரில் சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாகவாவது இருந்து விடுவதே சமுதாய தலைவர்களுக்கு நல்லது என்பது எனது பணிவான வேண்டுகோள் ஆகும்.

-ஹிபா மாவனல்லை
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment