இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், தங்கள் பக்கம் வருவதற்கு மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் விரும்புவதாக கூறியதால் குழப்பம் நீடித்தது.

இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். பின்னர் இரவு சுமார் 8 மணியளவில் அமைச்சர்களுடன் சென்று கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கூறினார். தனக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி கடிதம் கொடுத்தார். பின்னர் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். 

இந்நிலையில் இன்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி கூவத்தூரில் இருந்து அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பின் முடிவில், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

ஆளுநருடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்த அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் கடந்த 10 நாட்களாக நிலவிய இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளதால், இன்னும் 15 நாட்களுக்கு அரசியல் பரபரப்பு நீடிக்கும். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment