இலங்கையில் 2688 பேருக்கு எச்.ஐ.வி பாலியல் தொற்று நோய்.

இவ்வாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதலாவது அரையாண்டு முடிவில், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 2,688 பேர் நாடு முழுவதிலும் இருப்பதாக, சுகாதார அமைச்சின் தேசிய பால்வினை நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் நிகழ்ச்சித் திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டுப் பகுதியில், புதிதாக 58 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர். முதலாவது காலாண்டில் இனங்காணப்பட்ட 73 பேரோடு சேர்த்து, இவ்வாண்டில் 131 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த காலாண்டுப் பகுதியில், எய்ட்ஸ் சம்பந்தமான 11 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது காலாண்டில் 7 உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டில் 18 உயிரிழப்புகள், எய்ட்ஸ் சம்பந்தமாகப் பதிவாகியுள்ளன. இலங்கையில், எச்.ஐ.வி தொற்று பரவுதல் 0.02 என்ற குறைந்த சதவீதத்தில், கடந்தாண்டில் பதிவாகியிருந்தது. எனினும், அது சிறிது சிறிதாக அதிகரித்துகொண்டு வருகின்றது என்றும், அந்தத் தகவல் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி, எய்ட்ஸ் நோய் உருவாகியவர்களில், 431 பேர், நோய் சம்பந்தமான காரணிகளால் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர், நோய் சம்பந்தப்படாத வகையில், இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு இறுதியில், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகிய 36.7 மில்லியன் பேர், உலகளாவிய ரீதியில் இருந்தனர். அவர்களில் கூடுதலானோர் ஆபிரிக்காவிலேயே இருந்தனர். இரண்டாவதாக தென்கிழக்காசிய நாடுகளிலேயே உள்ளனர் என்றும் புள்ளிவிவரத் தகவல் தெரிவித்திருந்தது. இலங்கையில், எச்​.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோரில், ஆகக்கூடுதலானோர், மேல் மாகாணத்திலேயே இருக்கின்றனர். வேலைக்கு அமர்த்துதல், ஆகக்கூடுதலான மக்கள் தொகையினர் வாழ்வது, பாதுகாப்பற்ற உடலுறவு, சமபாலுறவு, இரத்த தானம் ஆகியவற்றின் ஊடாகவே, இத்தொற்று விரிவாகப் பரவுகின்றது.

இரத்தம் கொடுப்பதனால், எச்.ஐ.வி.தொற்று, நான்கு பேருக்கே பரவியுள்ளது. இரத்தம் வழங்குதல் தொடர்பில் தற்போது கடைப்பிடிக்கும் கொள்கையே இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதைத் தடுப்பதற்கு அவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கர்ப்பிணிகளில் 12 பேர் மட்டுமே, எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதனால், தங்களுடைய வயிற்றில் வாழும் குழந்தைக்கு அத்தொற்று பரவாமல் இருக்கின்றது. அதேபோல, எச்.ஐ.வி.தொற்றுக்கு இலக்காகாத குழந்தைகளும் பிறக்கின்றன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment