அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்ட வடக்கு- கிழக்கு இணைப்பையே கூட்டமைப்பு ஏற்கும்.

வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்ட கூட்டாட்சிக் (சமஷ்டி) கோட்பாட்டுக்கு இணங்க அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்ட தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் அம்பாறையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது. இது இறுதி அறிக்கை அல்ல. இடைக்கால அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் அடுத்த மாதம் விவாதிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அரசமைப்பு வரையப்படும். அதுவும் அறிக்கையாக வெளிவந்து அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றில் விவாதிக்கப்படும். பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசமைப்பின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டும்.

அது மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு பொது வாக்கெடுப்புக்கும் விடப்பட்டு வெற்றிபெற வேண்டும். அதன் பின்னரே புதிய அரசமைப்புக்கு நடைமுறைக்கு வரும். தற்போது இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவந்துள்ளது. ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு கருத்தொருமிப்பை அடைவதற்கான நலன்கருதி இடைக்கால அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முதன்மைக் கோட்பாடுகளை இரண்டு முதன்மைக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்குமாயின், அவற்றுடனான இணக்கத்தைப் பரிசீலிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது.

புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் முழுமையாக வெற்றிபெறவேண்டும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இலங்கை இனிமேல் ஒருமித்த நாடு. எனவே, பிரிபடாத மற்றும் பிரிக்க முடியாத நாட்டுக்குள் கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு இணங்க அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீளிணைக்கப்பட்டு ஒரு மாகாணமாக அமைதல் வேண்டும். இந்த நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. இவ்வாறானதொரு தீர்வையே கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும்“ என்றார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment