சம்மாந்துறையில் சேவையின் நாயகனாக திகழ்ந்த அன்வர் இஸ்மாயில் பற்றி நீங்கள் அறிய வேண்டியவைகள்.


நன்றி - அன்சார் காசீம்.


சட்டத்தரணியாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும், அமைச்சராகவும் குறுகிய காலம் மக்கள் பணியிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டு வந்த அன்வர் இஸ்மாயில் எம்மை விட்டுப் பிரிந்து பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களுக்கான தனியான அரசியல் ஸ்தாபனத்தை நிறுவி அதனை வழிப்படுத்தி தென்கிழக்கை செழிப்படையச் செய்த எம்.எச்.எம்.அஷ்ரஃப் எனும் அரசியல் ஆளுமையைச் சுமர்ந்த மண் சம்மாந்துறை ஆகும். இந்த மண்ணிலே தான் அன்வர் இஸ்மாயில் 1967ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி பிறந்தார்.
முஸ்லிம் அரசியலிலும் அவர் பிறந்த மண்ணான சம்மாந்துறை அரசியலிலும் அவர் எழுப்பிய அதிர்வுகள் இன்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அவரது இடைவெளி நிரப்பட முடியாததொன்றாகவுள்ளது. 

மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் எமக்கு அரசியல்வாதியாக தோற்றமளிக்கலாம் ஆனால் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை அமாத்தமாக உள்வாங்கித் தன்நாடிகளிலும் ஓடவிட்ட அஷ்ரஃப் என்ற பெருந்தலைவரின் அரசியல் குழந்தைதான் அன்வர் இஸ்மாயில் ஆவார்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த அன்வர் இஸ்மாயில், தான் ஒரு சட்டத்தரணியாக வரவேண்டுமென்ற இலட்சிய வேட்கையோடு கலைத்துறையில் காலடி எடுத்து வைத்து தனது இலட்சியத்தை எவ்வித தங்கு தடையுமின்றி அடைந்து கொண்டார். பாடசாலைக் காலத்தில் விளையாட்டிலும், விவாதங்களிலும் ஈடுபட்ட இவர், மாணவத்தலைவரதகவும் செயற்பட்டிருந்தார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டபீட மாணவர்களைச் சேர்த்து அங்கு முஸ்லிம் மஜ்லிஸின் செயலாளராகவும், விவாதக்குழுக்களின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

“வானத்தால் வந்து விழுந்ததைப்போல்” அவர் அரசியலுக்குள் வந்து விழவில்லை. அதற்காக அவர் அதிகப் பிரயத்தனம் எடுத்துள்ளார். மாணவர் பருவத்திலிருந்து துடுக்கான தலைமைத்துவமும், சமூக சேவை ஈடுபாடும் அதனைத் தொடர்ந்தான 1977 காலப் பகுதியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேடைப் பேச்சுக்களம் அவரது அரசியல் ஆளுமைகளுக்கு களம் அமைத்தன. 
1985 இல் இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமடைந்த காலகட்டத்திலே முஸ்லிம்களின் பிரச்சினைகளை வெளிக்கொணவர்வதில் முன்னின்று உழைத்த இயக்கமான பாமிஸின் கிளை நிறுவனமான “முஸா” என்ற அமைப்பினைச் சம்மாந்துறையில் நிறுவி முஸ்லிம்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தினார்.

1988,1989, 1990ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் நிகழ்ந்த யாழ். முஸ்லிம்களின் வெளியேற்றம், காத்தான்குடி, ஏறாவூர், மூதூர், கல்முனை மற்றும் சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் நிகழ்ந்த முஸ்லிம்களின் படுகொலைகள் மற்றும் காரைதீவில் வைத்து முஸ்லிம் பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பான அஷ்ரப் அவர்களினால் 1992இல் “கறுப்பு வெள்ளி”யை தேசிய ரீதியல் பிரகடனம் செய்த போது அன்வர் இஸ்மாயில், அதனை மாணவர் சுயாதீன அமைப்பினூடாக அதனை வெற்றிகரமாக முன்னெடுத்தார்.

சட்டபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டது முதல் அரசியல் பின்னணியினாலும், சமூக செயற்பாட்டினாலும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியமான தேசிய ரீதியான போராளியாகத் திகழ்ந்ததோடு, பல்கலைக்கழக மாணவர் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் விதையை ஆழப்பதித்து வேருன்றச் செய்வதில் முன்னணி வகித்ததுடன், காங்கிரஸின் முன்னணிப் போராளியாகவும் மாறினார்.

அஷ்ரஃபின் ஆளுமையைப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்ட ஒருவராக அன்வர் இஸ்மாயில் நிகழ்ந்தார். இதனால் இவரது அரசியலை எதிர்த்தவர்களும் அஷ்ரஃபின் “அரசியல் குழந்தை” யாகவே அவரை வர்ணித்துள்ளனர்.

அஸ்ரஃபின் அரசியல் பணியில் பாரியதொரு பகுதியைத் தனது தலையில் சுமர்ந்து கொண்டு சம்மாந்துறையின் உத்தியோகப்பற்றற்ற பாராளுமன்ற உறுப்பினராக 1994-2000ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் செயற்பட்டார்.

நிறைந்த பேச்சாற்றல், வசீகரம், தைரியம், மக்களின் மனதினை ஆளமாக அறிதல், சந்தர்ப்பத்தினை நன்றாகச் சரிவரப்பயன்படுத்தல், அரசியல் மேலிடத்தில் சாதிக்கக்கூடிய மதிநுட்பம், பரந்த அரசியல் அனுபவம், விரைவாகப் புரிந்து கொள்ளும் தன்மை, சரியான நேரத்தில் சரியான முடிவு, ஆதரவாளர்களை அரவணைக்கும் பண்பு, புன் சிரிப்பு போன்ற குணங்களினால் தனக்கென ஒரு பிரத்தியோக ஆதரவாளர்களை கொண்ட வட்டத்தினை உருவாக்கி அதில் அரசியல் பயணத்தினை மேற்கொண்டார்.

மர்ஹூம்களான எம்.ஏ. அப்துல் மஜீத், தொப்பி முகைதீன் போன்ற பிரபல்யமான சம்மாந்துறையின் பாராளுமன்ற உறுப்பினர் பாரம்பரியத்தில் அன்வர் இஸ்மாயில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தலைவர் அஷ்ரஃபின் மறைவிற்கு பின்னர், 2001ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராகி, அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மிகத் தீவிரமான ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே செயற்பட்டார். சம்மாந்துறையின் பல்முனை அபிவிருத்தியில் அவர் கவனம் செலுத்தினோடு, அவரது அரசியல் இலக்குகளில் மிகப் பெரும் சவாலாக முஸ்லிம் அரசியல் தொடர்பான அஷ்ரஃபின் கனவுகளை நிறைவேற்றுவதில் அவர் பெரிதும் அவாக் கொண்டிருந்தார்.

சம்மாந்துறையில் மக்கள் பணிமனை என்ற பெயரில் காரியாலயம் திறந்து ஜனாதிபதி பிரேமதாஸா போன்று இரவு பகலாக அரசியல் செய்த பாராளுமன்ற உறுப்பினராகும். தனது மக்களையும், மண்ணையும் நேசிப்பதிலேயே அன்வர் இஸ்மாயில் முதன்மை வாய்ந்தவர். தனது ஊருக்காக எத்தனை படிகளையும் ஏறி இரங்கத் தயங்காதவர். 

பாராளுமன்றத்திற்கு எப்போது செல்லும் போதும் கோவைகள் கட்டொன்றுடன் செல்வார். மக்களின் பிரச்சினைகளுக்காக ஒவ்வொரு அமைச்சர்களிடம் சென்று தீர்வுகளைக் காண்பதற்கு இவர் பின் நிற்கவில்லை. மர்ஹும் அன்வர் இஸ்மாயில் முஸ்லிம் மக்களுக்கு குறிப்பாக சம்மாந்துறை மக்களுக்கு என்றென்றைக்குமான முகவரியை தேடித் தந்துள்ளார்.

2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாகவும், ஆணித்தரமாகவும் விடுதலைப்புலிகளை சாடியும் அவர் உரையாற்றினார். அப்போது விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களை புறக்கணித்து “மூன்றாம் தரப்பு” விடயத்தில் முறண்பட்டு பாராளுமன்றப் பகிஷ்கரிப்பைச் செய்தார்.

முறண்பாடுகள் வலுத்த போதுதான் வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டு பிரிந்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார். 

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற அச்சமும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிவுடன் உடன்பட்டுச் செல்ல முடியாத துரதிஷ்டமும் சம்மாந்துறையின் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடுமோ என்று சிந்தித்து தேசியப்பட்டியலே அதற்குரிய சரியாத வழி என்ற அவரது அன்றைய முடிவு மிகச் சாதாரணமானதல்ல.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முஸ்லிம்கள் மத்தியில் புதியதொரு அரசியல் சித்தாந்தத்தை எடுத்துச் சென்று கிழக்கிழங்கையிலே உள்ள பெரிய தேர்தல் தொகுதியான சம்மாந்துறைத் தொகுதியில் தேசியப்பட்டியல் வேட்பாளராக அன்வர் இஸ்மாயில் தன்னம் தனியாக நின்று 26 நாட்களக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தினை மக்களுக்கு அறிமுகப்படுத்தி முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியை வெற்றி கொண்டு பலராலும் பாராட்டுப் பட்டதுடன், அன்றைய ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய பங்காளர்களில் ஒருவராகவும் செயற்பட்டார்.

கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராகவும், நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் திகழ்ந்த அன்வர் இஸ்மாயில் தேசிய ரீதியாகப் பர சாதனைகளைப் புரிந்தவர். ஹம்பாந்தோட்டை வெகரகல நீர்ப்பாசன அபிவிருத்திட்டம், புத்தளம் தெதுறு ஓயா நீர்ப்பாசன அபிவிருத்திட்டம், மஹாஓயா முந்தனி ஓயா பள்ளத்தாக்குஅபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரம்புக்கன் ஓயா நீர்ப்பாசனத்திட்டம் முதலானவற்றை அவர் செயல்படுத்தத் துணிந்தார்.

குறிப்பாக பெருந்தலைவர் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் சந்திரிகா அம்மையாரிடமிருந்து இரண்டு பீடங்களை கொண்டு வருவதற்கு பெருமுயற்சியினை செய்து அதில் ஒன்றான அறபு இஸ்லாமிய பீடத்தினை உருவாக்கி அவற்றில் இன்று சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கச் செய்த பெருமையும் அந்தப் பல்கலைக்கழகத்தை பெருந்தலைவர் அஷ்ரப் கொண்டு வந்த நோக்கத்தையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்ற பெருமையும் அன்வர் இஸ்மாயிலையே சாரும்.

தான் பிறந்த மண்ணில் அபிவிருத்தி பணிகள் நடக்க வேண்டும். அழகுற இருக்க வேண்டும் என இரவு, பகலாக அலைந்து திரிந்த காலங்கள் அதிகமாகும். தன்னைச் துாசித்தவர்களை கண்டு கொள்ளவில்லை. தான் கொண்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று மட்டுமே செயற்பட்டார்.
அன்வர் இஸ்மாயில் வெறும் ஆறு வருட பாராளுமன்ற வாழ்க்கையில் பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும், அமைச்சராகவும் குறுகிய காலத்திற்குள் திகழ்ந்து மக்களுக்கு அறிய பல சேவைகளை புரிந்துள்ளதுடன், தன் மனைவி, பிள்ளைகளை விடவும் நேசித்த தான் பிறந்த மண்ணான சம்மாந்துறை மக்களுக்கு என்றென்றைக்குமான முகவரியை தேடித்தந்துள்ளார்

சம்மாந்துறை அரசியலிலும் முஸ்லிம் அரசியலிலும் ஆளுமை பதித்த அன்வர் இஸ்மாயிலின் பணிகள் போல் சாதிக்க பலரை நமது சமூகம் எதிர்பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஒரு சிறுபாமர மகனின் அரசியல் எதிர்பார்க்கையில் இருந்து ஒரு ஊரின், சமூகத்தின், தேசத்தின் அரசியல் எதிர்ப்பார்க்கைகள் வரை ஒரே நேரத்தில் செயற்படக்கூடிய அர்ப்பணிப்புள்ள அரசியல் பிரதிநிதிவத்திற்கு அன்வர் இஸ்மாயில் நல்லதொரு உதாரணமாகும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment