சமஷ்டி கிடைக்க சிங்களவர்கள் விட்டு விடுவார்களா...??

13வது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற காணிஅதிகாரம், பொலிஸ் அதிகாரம், நிதி அதிகாரம் போன்றவற்றை செயல்படுத்தவே அனுமதிக்காத இந்த சிங்கள அரசாங்கங்கள், இதை விட கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட சமஷ்டி அமைப்பை கொடுப்பார்களா? அதனை சிங்கள மக்கள் அனுமதிப்பார்களா? என்ற விடயத்தை ஆழமாக சிந்திக்கும் சிந்தனைவாதிகளுக்கு விளங்காத விடயமல்ல.

தமிழர்களுடைய போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து பல ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன, இதனை ஆயுதப்போராட்டத்தின் ஊடாகத்தான் பெறமுடியும் என்ற முடிவின் அடிப்படையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருந்தபோது.

யுத்தம் என்றால் யுத்தம் சமாதானம் என்றால் சமாதானம் என்று கூறிக்கொண்டு ஜே.ஆர். ஜெயவர்த்னா அவர்கள் யுத்தத்தை தேர்ந்தெடுத்து லலித் அத்துலத்முதலியிடம் பந்தோபஸ்த்து அமைச்சை கொடுத்து யுத்தத்தை கடுமையாக முன்னெடுத்தார்.


அதன் காரணமாக தமிழர்களுடைய ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வர இருக்கும் போதுதான், இந்தியா மிராஜ் விமானத்தை இலங்கைக்கு மேலாக பறக்கவிட்டது. அத்தோடு ஜே.ஆர். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் தமிழர்களுக்கு தீர்வையும் வழங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை சிங்கள மக்களும் எதிர்க்கமுடியாத அசாதாரண நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பம் ஜே.ஆர் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பை தனித்திருந்தது. இந்த நிலையில்தான் 13வது திருத்தச்சட்டத்தினூடாக மாகாணசபைகள் என்ற அதிகாரத்தை தமிழர்களுக்கு தீர்வாக முன்வைக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு ஜே.ஆர் ஆட்சி தள்ளப்பட்டிருந்தது.

அதனைக்கூட நீதிமன்றத்தில் இருந்த ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரித்ததன் காரணமாகவே தப்பிப் பிழைத்தது. இல்லாது விட்டால் பெரிய சீரழிவை இலங்கை அரசாங்கம் அன்று சந்திக்கவேண்டியிருந்திருக்கும்.


இப்படியான சூழ்நிலையில் கிடைக்கப்பெற்ற மாகாணசபை அதிகாரங்களையே முழுமையாக அனுபவிக்க கொடுக்காமல் இடையில் நின்றுகொண்டு தடைபோடும் சிங்கள அரசாங்கங்கள், இதனை விட கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட சமஷ்டியை வழங்க முன் வருவார்களா? என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?

சரி அப்படியொரு அதிகாரம் கூடிய சமஷ்டியை வழங்குவது என்றால், இந்தியாவின் மிராஜ் விமானம் திரும்பவும் நாட்டுக்குமேலால் பறக்கவேண்டும் அப்போதுதான் 13க்கு கூடுதலான தீர்வு கிடைக்ககூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். அதே நேரம் சிங்கள மக்களும் அதனை பயத்தில் அனுமதிப்பார்கள்.


அந்த நிலைமை இப்போது கிஞ்சித்தும் கிடையாது, அதே நேரம் தமிழர்களின் ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சமஷ்டி போன்ற கூடிய அதிகாரம் பொருந்திய பொதியை தமிழர்களுக்கு வழங்க சிங்கள அரசுகள் முன்வரப்போவதுமில்லை, அதனை சிங்கள மக்கள் அனுமதிக்கப்போவதுமில்லை என்பதே உண்மையாகும்.

காலத்தைக் கடத்துவதற்கும் அதேநேரம் தங்களது அரசியலை நடத்துவதற்கும் இந்த பிரச்சினையை காட்டிக்காட்டி காலத்தையும் நேரத்தையும் இழுத்தடிப்பார்களே தவிர, இதற்கு தீர்வை வழங்கவே மாட்டார்கள். இதனை பூரணமாக அறிந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் இதனை தங்களது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திவிட்டு தப்பியோடுவதையே நாடகமாக நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

ஆகவே, சமஷ்டி என்பது புஷ்வானம், அது வேடிக்கை காட்டவே உதவுமே தவிர தீர்வை பெற கடைசிவரைக்கும் உதவாது என்பதே மறைக்கமுடியாத உண்மையாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment