கார் வாங்கப் போகிறீர்களா? இந்த 6 வழிகளைப் பின்பற்றி காசை மிச்சப்படுத்துங்கள்...!!

தகவலுக்கு நன்றி - மீனா.

நம்ம ஒரு கார் வாங்க மாட்டோமா? என்ற ஏக்கம் யாருக்குத்தான் இருக்காது... பெரும்பாலான மக்களின் கனவே கார் வாங்குவதாகத்தான் இருக்கும். ஆனால், அதை வெற்றிகரமாக நிறைவேற்ற எல்லோராலும் முடிவதில்லை.  

சொந்தமாக வீடு வாங்கும் செலவுக்கு அடுத்தபடியாக ஒரு மனிதனுக்கு பெரிய செலவாக இருப்பது கார் வாங்குவதுதான். அப்படியாக ஒரு காரை வாங்கினாலும், அதற்கான கடனை அடைக்க வேண்டும். அல்லது வட்டியாவது கட்ட வேண்டும் என பல தலைவலிகள் வரும்.  

பிறகு எப்படி அந்த காரில் நிம்மதியானதொரு பயணத்தை மேற்கொள்ள முடியும்? திட்டமிட்டு நீங்கள் கார் வாங்கினால் இந்தப் பிரச்னைகளையெல்லாம் தவிர்க்க முடியும். கொஞ்டம் ஸ்மார்ட்டாகவும், சமயோஜிதமாகவும் யோசித்து, உங்களுக்கென ஒரு காரை எந்தவிதமான சிக்கலுமில்லாமல் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.  

பிறகென்ன குடும்பத்துடன் சுற்றுலா கிளம்பி வாழ்க்கையை அனுபவிக்கலாம். அப்படி ஒரு மகிழ்ச்சியைத் தருவதற்காக, கார் வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்..

பட்ஜெட்டைக் கணக்கிடுங்கள்.

கார் வாங்குவதில் முதலில் சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் பட்ஜெட். உங்களிடம் உள்ள தொகை என்ன? அதற்கு எந்த காரை வாங்க முடியும்? என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். லோன் மூலம் வாங்குவீர்களேயானால், முன்பணமாக எவ்வளவு தொகை செலுத்த முடியும்? கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி? உள்ளிட்ட விஷயங்களை கணக்கிட்டுப் பார்த்து முடிவெடுங்கள். இதைத்தவிர காருக்குண்டான சாலை வரி, மாநில வரி, இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட கூடுதல் செலவினங்களை சமாளிப்பது எப்படி என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு முன்கூட்டியே பட்ஜெட்டைத் திட்டமிட்டுவிட்டால், கடைசி நேர கூடுதல் செலவினங்களுக்கு அலைய வேண்டியதில்லை.

உங்களுக்குப் பொருத்தமான காரை முடிவு செய்யுங்கள்.

பட்ஜெட்டைத் தொடர்ந்து எந்த கார் வாங்கலாம் என சரியான முடிவெடுப்பது அவசியம். உங்களது பட்ஜெட்டுக்குள் அடங்கும் விலையில் நிறைய மாடல் கார்கள் உள்ளன. அதில் எது உங்களுக்குப் பொருத்தமானது என்பதைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக குடும்பத்துடன் அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் என்றால், அதற்கு தக்கவாறு இடவசதியுடன் கூடிய காரைத் தேர்வு செய்வது அவசியம். அதேபோல், 30 கிலோ மீட்டருக்கும் குறைவாகவே தினந்தோறும் உங்கள் பயணம் இருக்குமாயின் டீசல் காரைத் தெரிவு செய்ய வேண்டியதில்லை. இப்படியாக உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் உள்ள தேவைகளைப் பொருத்து நல்ல மாடல் காரை முடிவு செய்யுங்கள்.

பலகட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட ஓரிரு மாடல் கார்களை இறுதி செய்திருப்பீர்களேயானால், அடுத்தகட்டமாக அந்த மாடல்கள் குறித்து சிறிய ஆய்வு மேற்கொள்ளுங்கள். அதன் விலை, சிறப்பம்சங்கள், செயல்பாடுகள், குறைபாடுகள் உள்ளிட்டவற்றை டிரைவ் ஸ்பார்க் போன்ற தரமான இணையதளப் பக்கங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். அந்த மாடல் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் தரும் கருத்துகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அருகில் உள்ள டீலரிடம் சென்று காரின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து கேட்டறிய வேண்டும்.

டெஸ்ட் டிரைவ்.

பொதுவாகவே ஒரு காரில் சோதனை ஓட்டம் மேற்கொண்டால், அது நன்றாக இருப்பதாகவே ஒரு தோற்றம் ஏற்படும். ஆனால், நீங்கள் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகள், சுமாரான சாலைகள் ஆகியவற்றில் டெஸ்ட் டிரைவ் செய்து குறிப்பிட்ட மாடலை திருப்தியுடன் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் அனைத்துவிதமான சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல்களிலும் நீங்கள் தேர்வு செய்த மாடல் கார் எந்தவித சிக்கலும் இன்றி பயணிக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

விலை பேரம்.

கார்களுக்குப் பொதுவாகவே அதிகபட்ச சில்லறை விலையோ, ஒரே விலையோ கிடையாது. எனவே, அதன் விலையில் வழங்கப்படும் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடும். அதைக் கருத்தில் கொண்டு சரியான விலைக்கு காரை வாங்குங்கள். பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வீர்களேயானால், அதற்கு உரிய விலையையும், போனஸையும் கேட்டுப் பெற வேண்டும். எந்த டீலர் சரியான விலையும், நியாயமான எக்ஸ்சேஞ்ச் போனஸும் தருகிறாரோ அங்கு கார் வாங்குவது நல்லது.

மகிழ்ச்சியோடு வாங்குங்கள்.

விலை பேரம் முடிவுக்கு வந்து விட்டால், முன்பணத்தைச் செலுத்தி காரை புக் செய்யலாம். அதற்கான விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் விதிகள், நிபந்தனைகளை நன்கு படித்துப் பார்த்த பிறகு கையொப்பமிடுங்கள். உரிய நேரத்தில் டெலிவரி கிடைக்குமா? இலவச சர்வீஸ் ஆஃபர்கள் எப்போது? என்பன உள்ளிட்ட கேள்விகளை தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். இந்த ஆறு வழிமுறைகளையும் பின்பற்றியிருந்தால், நீங்கள் ஸ்மார்ட்டாக காரை வாங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment