அக்கரைப்பற்று அரசியல்வாதியொருவர் பெட்டிகளின் கனதிக்காக போலிப் பிரச்சாரம் செய்கிறார்.

ஏ.எல்.தவம் (முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்)

எப்போதெல்லாம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறதோ – அப்போதெல்லாம் அம்முயற்சிகளைக் குழப்புவதற்கான சர்ச்சைக்குரிய விடயமாகத் தூக்கிப் பிடிக்கப்படுவது வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயமாகும். தற்போதும் சாத்தியமே இல்லாத இவ்விடயம் அரசியல் லாபத்திற்காகத் தூக்கிப் பிடிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம்.

இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இவ்வாறு வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயமே தூக்கிப் பிடிக்கப்பட்டது. அன்று அவ்விடயத்தை பிராந்திய வல்லரசின் ஏஜெண்டுகளாக இரண்டு பேர் தூக்கிப்பிடித்தார்கள். அதில் மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதி ஒருவரும் - அக்கரைப்பற்று முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரும் அடங்குவர். அதற்காக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியவை “பெட்டி பெட்டியாக” வழங்கப்பட்ட கதைகள் கண்ணூடாகக் கண்ட சாட்சிகளுடாக இன்று வரைக் கூறப்பட்டு வருகின்றன.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீனாவிற்கு வழங்கிய விடயத்தில் உக்கிர கோபத்தில் இருக்கும் பிராந்திய வல்லரசு, இலங்கையின் அரசியலைக் குழப்பி, தீர்வு முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்தி, அரசின் ஸ்தீரத்தன்மையை இல்லாமல் செய்யக் களமிறங்கியுள்ளது. அதில் தனது கடந்தகால எதிரி மகிந்த ராஜபக்சவை – எதிரியின் எதிரி நண்பன் என்ற வகையில் - ஒரு இயங்கு களச்செயற்பாட்டாளராகக் கூட்டுச் சேர்த்துள்ளது.

மகிந்தவுக்கும் அரசாங்கத்தைக் குழப்பி மீண்டும் ஆட்சி அதிகாரத்தைத் தம் வசப்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி நிரல் இருப்பதால் – இவ்வொன்றிணைவு இலகுவாக ஏற்பட்டுள்ளது. இவ்வழியூடாகதான், மகிந்தவாதியான அக்கரைப்பற்று அரசியல்வாதிக்கு மீண்டும் அதே வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற – மக்களை ஏமாற்றும் - கொந்தராத்துக் கொடுக்கப்பட்டு களமிறக்கி விடப்பட்டுள்ளது. மகிந்தவாதியான அக்கரைப்பற்று அரசியல்வாதிக்கு மீண்டும் தான் இழந்து நிற்கும் அதிகாரத்தை எப்படியாவது பெறவேண்டும் என்ற காய்ச்சல் இருப்பதால் – கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு – கிளம்பி இருக்கிறார்.

வடக்கும் – கிழக்கும் இணைக்கப்பட்டு - இதற்குப் பிறகு ஒரே மாகாணமாக - நிரந்தரமாக அமைய வேண்டுமாயின், அதற்கு - பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதோடு – சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டிய தேவையும் – சட்ட ரீதியிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான இணைப்புக்கு ஆதரவு வழங்கினால் - நாட்டைப் பிரிக்க உதவிய துரோகிகளாகத் தாம் சித்தரிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் - அரசாங்கத்திலுள்ள சிங்கள எம்.பீக்கள் யாரும் ஆதரவு வழங்க மாட்டார்கள். அதுமாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்கின்ற நிலையில் – இவ்விணைப்பு என்கின்ற விடயம் படுதோல்வி அடைந்துவிடும்.

இந்நிலையில், இதிலுள்ள சுவாரசியம் என்னவெனில் வடக்கு – கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேசும் மகிந்தவாதியான அக்கரைப்பற்று அரசியல்வாதிக்கு, வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயம் கனவிலும் சாத்தியப்படாது என்பது மிகத்தெளிவாகத் தெரியும்.

அவ்வாறு தெரிந்திருந்தும், அதிகாரக் காய்ச்சலுக்கு மருந்தாகவும் – பெட்டிகளின் கனதிக்காகவும் – மக்களைக் குழப்பவும் – மகிந்த விசுவாசத்தைக் காட்டவும் களமிறங்கி - நாக்கூசாமல் பொய்யுரைக்கிறார். போலிப் பிரச்சாரம் செய்கிறார். மக்களை மாக்களாக்க முனைகிறார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment