சம்மாந்துறை பிரதேசத்தில் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.

சம்மாந்துறை பிரதேச சபை நகர சபையாக தரமுயர்த்தப்படவுள்ளது. இச்சபையின் ஊடாக சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. என சிரி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் 20 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் ஏழு வீதிகள் புனரமைப்பு உட்பட 17 வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் வைபவம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – சம்மாந்துறைப் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான சம்மாந்துறை பிரதேச சபை நகர சபையாக தரமுயர்த்தப்பட வேண்டுமென்பதாகும். இதுதொடர்பாக நானும், எமது கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீமும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர்களிடம் உத்தேச அறிக்கை அடங்கிய மகஜரை கையளித்திருந்தோம். அதன் பயனாக இதற்கென மாவட்ட மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழுவினரினால் கடந்த வாரம் இதற்கான அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ள கோரியுள்ளனர். இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வட்டாரங்களின் எல்லை நிர்ணயத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராகவும், அமைப்பாளராகவும் இருந்த ஏ.எம். நொஷாத்தினால் சம்மாந்துறையின் பிரதேச சபையின் வட்டார எல்லைகள் மற்றக் கட்சினரின் ஆலோசனைகளைப் பெறாமலும், தனக்கும் தனது கட்சிக்கும் ஏற்றவாறு தான்தோன்றித்தனமாகவும் வட்டார எல்லைகள் வகுக்கப்பட்டதினால் சம்மாந்துறை பிரதேச மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார்.

இது சம்பந்தமாக பாராளுமன்றத்திலும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடமும், அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடமும் நானும் எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் சம்மாந்துறை வட்டார எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கையினை விடுத்திருந்தோம். அதனை மாற்றித்தருவதாக வாக்குறுதியினை அழித்திருந்தனர். அதற்கான கால அவகாசம் காணப்படாமையினால் இந்த எல்லை மீள் நிர்ணயத்தில் திருத்தங்களை கொண்டு வரமுடியாதுள்ளது. 

கீழ் மட்ட மக்களின் நெருக்கமான அரசியல் பங்கேற்கு நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக உள்ளுராட்சி மன்றங்கள் விளங்குகின்றன. அவர்களுக்கான அபிவிருத்தி மற்றும் சமுதாய மேம்பாட்டு தேவைகளை அவர்களே திட்டமிட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு உள்ளுராட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தி மக்களுக்கு சிறந்த சேவையினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரேயொரு கட்சி முஸ்லிம் காங்கிரஸாகும். அதுவே முஸ்லிம்களின் சக்தியாகும். இந்நிலையில் இக்கட்சியை சீர்குலைப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட்டு முதன்முறையாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனைத்து வட்டாரங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி கொண்டு சபையின் ஆட்சி அதிகாரத்தினை முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் சம்மாந்துறையின் அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை வகுத்துள்ளது.

எனவே, அனைத்து மக்களும் சகல பேதங்களையும் மறந்து எதிர்வருகின்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்து கிராமத்தின் அபிவிருத்தியின் பங்காளியாக மாற வேண்டும். அதற்காக நானும், எமது கட்சியும் தயாராகவுள்ளோம்.
சம்மாந்துறை -7 ஹாஜியார் வீதி, ஜலாலியப் பள்ளி முன் வீதி, மலையடிக்கிராமம் -2, கல்- முதலாம் குறுக்கு வீதி, மல்கம்பிட்டி 11ஆம் குறுக்கு வீதி, கல்லரிச்சல்-2 மரைக்கார் வீதி, மல்- முதலாம் குறுக்கு வீதி, மலையார் குறுக்கு வீதி, அஸ்-ஸமா பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு உட்பட பல வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.எம். சலீம், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. சுல்பிகார், முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment