நாம் எல்லோரும் விரும்பி உண்னும் செப்பலி மீன் பற்றிய சில தகவல்கள்.

செப்பலி மீன் (திலாப்பியா) – Tilapia 

* Binomial Name :- Oreochromis Niloticus
* Family :- Cichlidae

113g இடைகொண்ட ஒரு செப்பலி மீனிலுள்ள ஊட்டச் சத்துக்கள்:

Nutrition Fact
Calories - 93
Total Fat - 1g
Cholesterol - 55mg
Sodium - 40mg
Carbohytrate - 0g
Protein - 21g


* பொதுவான தகவல் :- செப்பலி ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர் நீரிலும் வாழ வல்லது. மீன் வளர்ப்பு (Aquaculture) முறையின் மூலம் 2012ஆம் ஆண்டு FAO கணிப்பின்படி 4,507,000 மெட்ரிக் தொன்கள் வருடமொன்றுக்கு உலகாவிய ரீதியில் உற்பத்தி செய்து விநியோகிக்கப் படுகின்றன.

செப்பலி என்று அழைக்கப்படும் மீன் வேறு விதங்களிலும் தமிழில் அழைக்கப்படுகின்றது. திலேப்பியா, சிலேபி, சிலேபிக் கெண்டை முதலானவை இம் மீனின் வேறு பெயர்களாகும். இலங்கையில் புத்தளம் பகுதிகளில் ஜப்பான் மீன் எனவும் அழைப்பதுண்டு.

பெயரும், மூலமும்:

திலாப்பியா ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து உலகெங்கும் கொண்டு செல்லப் பட்ட உயிரினமாகும். ஆப்பிரிக்க பழங்குடிகள் ஒன்றில் மீன் என்பதற்கு 'தில்' என்ற ஒலிக்குறிப்பு இருந்ததாகவும், அதுவே திலாப்பியா என்ற சொல்லுக்கு மூலம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.


தோற்றமும் பரவலும்:

ஆப்பிரிக்காவில் 180 கோடி ஆண்டுகள் வயது கொண்ட உயிரினப் படிமங்களில் (Fossil) திலாப்பியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்குப் பிரதேசங்களில் திலாப்பியா தோன்றி வாழ்ந்தது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொசாம்பிகஸ் திலாப்பியா என்னும் வகை இந்தேனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மலேசியாவிற்கும், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் எகிப்தின் மன்னரால் நைல் திலாப்பியா ஜப்பானின் மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவற்றின் குஞ்சுகள் தாய்லாந்து மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அவரது சித்ரலாதா அரண்மனைக் குளத்தில் வளர்க்கப்பட்டன. இஸ்ரேலிலிருந்து ஆரியஸ் திலாப்பியா என்னும் வகை வட அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் கொண்டு செல்லப்பட்டது. காலப் போக்கில் தென் அமெரிக்காவிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி திலாப்பியா உலகெங்கும் பரவியது.

குடும்ப விபரம்

சிக்கிலிட்டுகள் (Cichlids) என்று வழங்கப்படும் குடும்பத்தை சேர்ந்த மீனினம்தான் திலாப்பியா. ஒடுங்கிய உடல்வாகும், முட்டையிட்டுப் பொரித்த மீன்குஞ்சுகளை தாய் மீனோ, தந்தை மீனோ, அல்லது இரண்டுமோ இணைந்து கவனத்துடன் காப்பதும் இக் குடும்பத்தின் சிறப்பம்சங்களாகும்.

உலகில் சுமார் 50 திலாப்பியா மீன் இனங்கள் (Species) உள்ளன. அவற்றை மூன்று தொகுதிகளாக (Genus) பிரிக்கலாம்:

1. ஓரியோக்ரோமிஸ் (Oreochromis) தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்களில் தாய் மீன்கள் குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ளும். கருவுற்ற முட்டைகளை வாயில் வைத்து குஞ்சு பொரிக்க செய்து, பின்னர் குஞ்சுகளையும் வாயில் வைத்துக் காக்கும் (கோழிகள் செட்டைகளில் குஞ்சுகளைக் காப்பது போல).

2. சாராத்தெரடான் (Sarotherodon) தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்களில் தந்தை மீன்கள் தனியாகவோ, அல்லது தாய் மீனுடன் சேர்ந்தோ குஞ்சுகளைக் கவனித்துக் கொள்ளும். கருவுற்ற முட்டைகளை வாயில் வைத்து குஞ்சு பொரிக்க செய்து, பின்னர் குஞ்சுகளையும் வாயில் வைத்துக் காக்கும்.

3. திலாப்பியா (Tilapia) தொகுதி: இந்தத் திலேப்பியா மீன்கள் வாயில் முட்டைகளைப் பொரிப்பதில்லை. மாறாக, நீர்நிலையில் தரையில் சிறு பள்ளம் தோண்டி, அதில் முட்டைகளையிட்டு தமது மார்புத் துடுப்புகளினால் விசிறி குஞ்சு பொரிக்க வைக்கின்றன.

மீன் வளர்ப்பில் ஓரியோக்ரோமிஸ் தொகுதியைச் சேர்ந்த திலாப்பியாக்களே பெரிதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதுகுச் செட்டையின் மேல் அமைந்த செம்மை மற்றும் நீல நிறம் இவற்றை அடையாளம் காட்டுகின்றன. இத் திலாப்பியாக்களில் முக்கியமானவை கீழ்க்கண்டவையாகும்:

ஓரியோக்ரோமிஸ் நைலோட்டிக்கஸ் (Oreochromis Niloticus)
நைல் திலாப்பியா - பெண் மீன்
நைல் திலாப்பியா - ஆண் மீன்


பொதுவான பெயர் - நைல் திலாப்பியா. இது இளங்கரிய நிறமும், சற்றே வெள்ளி நிறமும் கலந்த மீனாகும். நன்னீரில், வெப்ப நீரில் (28 டிகிரி சென்ட்டிக்ரேடுக்கு மேல்) வளர்க்கப்பட்டால் நைல் திலாப்பியா மற்ற இனங்களை விட விரைவாக வளரும்.

ஓரியோக்ரோமிஸ் ஆரியஸ் (Oreochromis Aureus)
நீல திலாப்பியா

பொதுவான பெயர் - நீல திலாப்பியா. இதன் இளங்கரிய மற்றும் வெள்ளி நிறக் கலவையில், நீல நிறம் சற்று தூக்கி நிற்கும். இது மற்ற திலாப்பியாக்களைக் காட்டிலும் குளிரை அதிகமாகத் தாங்க வல்லது.


இவற்றில் நைல் திலாப்பியா பெருமளவில் வளர்க்கப்படும் திலாப்பியா ஆகும். நீல திலாப்பியா x நைல் திலாப்பியா கலப்பினமும் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட மொசாம்பிகு திலாப்பியா (ஓரியோக்ரோமிஸ் மொசாம்பிகஸ், Oreochromis Mossambicus) உவர் நீரிலும், தரம் குறைந்த நீரிலும் வாழவும், வளரவும் வல்லது. ஆனால் இதன் அட்டைக் கரி நிறமும், மந்த வளர்ச்சியும் இது வளர்ப்பு மீனாக ஏற்றுக் கொள்ளப்பட தடையாகி விட்டன. ஆனால், மொசாம்பிகு திலாப்பியா சில முக்கியமான கலப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. குறிப்பாக, மொசாம்பிகு திலாப்பியா x நைல் திலாப்பியா மற்றும் மொசாம்பிகு திலாப்பியா x நீல திலேப்பியா கலப்பினங்களில் தானாகவே தோன்றிய சிவப்புத் தோல் கொண்ட சில மீன்களை தலைமுறை, தலைமுறையாக உள்கலப்பு (Inbreeding) செய்து உருவாக்கப்பட்டதே செந்திலாப்பியா (Red Tilapia). இந்த செந்திலாப்பியாவும் பரவலாக வளர்க்கப்படும் இனமாகும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment