முஸ்லிமாக இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் நீதியாக நடந்து கொள்ளுங்கள்.


Iyasdeen M Ithrees

தோட்டத்தில் பறித்த மரக்கறிகளை கொண்டு வந்து சந்தையில் விற்று விட்டு கிடைக்கும் நூறு, இரு நூறு இலாபங்களை வீட்டே எடுத்துக் கொண்டு செல்லும் ரங்கம்மா.

காலை மூன்று மணிக்கு முதல் எழுந்து மீன்பிடிக்கு தேவையான வலைகளையும், தூண்டில்களையும் எடுத்துக் கொண்டு வீட்டில் உறங்கும் தன் பிள்ளையின் முகத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு கடலுக்கு செல்லும் காசீம் லெப்பே.

தன் குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்து சென்று விட்டு விட்டு மூட்டை தூக்குவதற்காக சந்தைக்கு பறந்து செல்லும் மணி.

கொத்தனார் வேலை கை நிறைய காசு அதில் அரைவாசி மருந்துக்கு என்று முனங்கிக் கொண்டே காலையில் எழுந்து தொழிலுக்கு செல்லும் முகம்மது.

இப்படி எத்தனையோ ஜீவன்கள் நாள் சம்பளத்தில் தன் குடும்பத்தை மிகவும் கஷ்டப்பட்டு வழி நடாத்திக் கொண்டு செல்கின்றனர். இவர்கள் மனதில் இன்வெறியோ, பிரதேச வெறியோ இல்லை. ஆக இது எங்கே இருந்து ஊட்டப்படுகின்றது?

கடந்த ஒரு கிழமையாக சகல ஊடகங்களிலும் இரண்டு விடயங்கள் தனக்கென தனி இடம்பிடித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்தில் இனிமேல் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது. இரண்டாவது நல்லா இருந்த ஊரும் நகரசபையும் என கல்முனை, சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை.

முஸ்லிம்களும் தமிழர்களும் பிட்டும் தேங்காய் பூவைப் போன்றும் மிகவும் நெருக்கமானவர்கள் என்று எம் முன்னோர்கள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றோம். இது அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் கிரான் சந்தையில் நடந்த சம்பவம் காணப்படுகின்றது.

வயதில் கொஞ்சம் பெரியவர்கள் கல்வி அறிவில்லாதவர்கள்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று பார்த்தால் அங்கே இளைஞர்களும் குழுமி இருந்தமை வேதனை அளிக்கின்றது. முஸ்லிம் தமிழ் இன நல்லுறவில் விரிசலை ஏற்படுத்துவதற்காக சில முகநூல் பேக் ஐடிகள் இயங்கி வருவது கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

நான் தமிழன், நான் முஸ்லிம், நான் சிங்களவன் என்று சிந்திப்பதற்கு முதல் நான் மனிதன் என்று சிந்திக்க துவங்குங்கள். அநீதி இழைக்கப்படுவது யாராகவும் இருக்க கூடாது நீதி அனைவருக்கும் பொதுவானதே. இன்று 30 வருட கால கொடூர யுத்தம் நிறைவு பெற்று மக்கள் மீண்டும் தங்களது வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொள்ள தயாராகின்ற போது அதற்கு வேட்டு வைக்கும் முகமாக இவ்வாறு இரண்டு இனங்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தி அதில் குளிர் காய நினைப்பவர்கள் தயவு செய்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். இறுதியில் அப்பம் பிரித்த கதையாக மாறி இன்னோருவர் பெரியவர் ஆகிவிட கூடும்.

நான் ஆரம்பத்தில் கூறியது போன்று இன்வெறியை நீங்கள் விதைத்து விட்டு சென்று விடுவீர்கள் இதனால் பாதிக்கப்பட போவது எனது பிள்ளைகளும் உங்களது பிள்ளைகளும்தான். பிரச்சினை எதுவாக இருந்தாலும் இரண்டு ஊர் தலைவர்களும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். அதைவிடுத்து ஒரு சாரார் இன்னொரு சாராரின் ஊருக்குள் நுழையக் கூடாது வியாபாரம் செய்யக் கூடாது என தடை விதித்தால் எம்மை விட ஈனப் பிறவிகள் வேறு யாராகவும் இருக்க முடியாது. இப்படி எல்லாரும் நினைக்கத் துவங்கினால் நடக்கப் போவது என்ன? விடை பூச்சியம்தான். இறுதியில் பாதிக்கப்பட போவது ஏழைகளும் எளியவர்களும்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment