அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் Dr.சமீம் சாதனை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கத்திக்குத்துக்கு இலக்காகி குற்றுயிரான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அதிதீவிர சத்திர சிகிச்சையின் பயனாக அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் அவர்களின் விரைவான தீர்மானம் மற்றும் மதிநுட்ப செயற்பாடு காரணமாகவே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞர் உயிர் பிழைத்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது;

சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி, கிட்டத்தட்ட மரணித்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 3.15 மணியளவில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எட்டாம் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அங்கு உடனடியாக விரைந்த சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் அவர்கள், கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞரை பரிசோதித்து விட்டு, எக்ஸ்ரே, ஸ்கேன் எதுவும் எடுப்பதில் நேரத்தை போக்காமல் நேரடியாகவே சத்திர சிகிச்சை கூடத்திற்கு கொண்டு சென்று, அவர் தலைமையிலான வைத்தியக்குழுவினரால் குறித்த இளைஞரின் நெஞ்சுப் பகுதி மிகவும் அவசர அவசரமாக பிளக்கப்பட்டு, ஈரலில் கத்திக்குத்து காயத்தினால் ஏற்பட்டிருந்த இரத்தப்பெருக்கை தடை செய்வதற்கான அதி தீவிர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் இரண்டு மணித்தியால சத்திர சிகிச்சை போராட்டம் இறைவன் உதவியினால் வெற்றியளித்ததாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது. இவ்விளைஞருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதில் பத்து நிமிடம் தாமதிக்கப்பட்டிருந்தாலும் கூட அவரை உயிருடன் பார்த்திருக்க முடியாமல் போயிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வரலாற்றில் இப்படியொரு அதிதீவிர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, உயிரொன்று காப்பாற்றப்பட்டமை இதுவே முதல் தடவை என்றும் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது.

உயிர் மூச்சு எதுவும் இல்லாமல் மரணித்து விட்டார் என்ற நிலையிலேயே எமது பிள்ளையை வைத்தியசாலையில் சேர்த்தோம். ஆனால் சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட வைத்தியக்குழுவின் அதிவேக நடவடிக்கையினால் எமது பிள்ளைக்கு மீண்டும் உயிர் கிடைத்துள்ளதையிட்டு இறைவனுக்கும் வைத்தியர்கள், தாதியர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் உருக்கமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என இளைஞரின் பெற்றோர் தெரிவித்தனர்.

அதேவேளை கடந்த வாரம் கத்திக்குத்துக்கு இலக்கான கல்முனைக்குடியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் இதே வைத்தியசாலையில் சாதாரண நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சுமார் நான்கு மணித்தியாலங்கள் அவருக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் நேரம் வீணடிக்கப்பட்டதனால் அவர் உயிரிழக்க நேரிட்டதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அன்றைய தினம் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் வெளிநாடு சென்றிருந்ததால் வேறொரு வைத்தியசாலையின் சத்திர சிகிசிச்சை நிபுணர் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment