இந்து கோவில்களில் மிருகப் பலிக்கு தடை - நீதிபதி இளஞ்செழியன்.

மாவட்டத்திலுள்ள அனைத்து இந்து கோவில்களிலும் மிருகப் பலியிடலுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுதலுக்கு எதிராக அகில இலங்கை சைவ மகா சபையின் தலைவர் சிவக்கொழுந்து சோதிமுத்துவால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வலிகாமம் பிரதேச சபை, வட மாகாண உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கின் இடைபுகு எதிர் மனுதாரராக கவுனாவத்தை நரசிம்ம வைரவர் ஆலய சபையினர் தங்களையும் விசாரணையில் இணைத்துக்கொள்ளுமாறு தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு அமைய, நீதிமன்றம் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது.
வலிகாமம் பகுதியில் வேள்விப்பூஜையின் போது மிருகங்கள் மற்றும் கோழிகள் பலியிடுவதை நிறுத்துவதற்கு தடை பிறப்பிக்குமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கு இறைச்சிக்கடை சட்டத்தின் கீழ் அனுமதி கோருவது சட்ட முரணானது என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவித்தார்.
மிருகங்களை துன்புறுத்துவதும் கொடுமைப்படுத்துவதும் வதை செய்வதும் சட்ட முரணானது எனவும், 10,000 மக்கள் முன்னிலையில் 200 தொடக்கம் 500 ஆடுகளை கோவில் வளாகத்தில் வெட்டுவது சட்ட முரணானது எனவும் நீதிபதி இதன்போது தெரிவித்தார்.
தலதா மாளிகை பெரஹெரவின் போதும் நல்லூர் தேர்த்திருவிழாவின் போதும் கிறிஸ்துமஸ் நடுநிசி பூஜையின் போதும் காலி முகத்திடலில் யாத்திரிகர்கள் வணங்கும் போதும் பகிரங்க இடங்களில், மக்கள் முன்னிலையில் 200 தொடக்கம் 500 ஆடுகளை வெட்டுவதற்கு அனுமதி கோர முடியுமா? எனவும் அப்படி அனுமதி கோரினால் மத பாரம்பரியம், 300 ஆண்டுகால சம்பிரதாயம் எனக் கூறி அதற்கு அனுமதி வழங்க முடியுமா எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிமன்றில் கேள்வி எழுப்பினார்.

எனவே, பொதுமக்கள் கூடுகின்ற ஆலயத் திருவிழாக்களின் போது வேள்விப்பூஜை எனும் பெயரில் மிருகங்களைப் பலியிடுவதற்கு முற்று முழுதான தடை பிறப்பிப்பதாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
ஆலயங்களில் மிருகப் பலியிடலுக்கு எந்தவொரு அதிகாரியும் அனுமதி வழங்கக்கூடாது என்று கூறிய நீதிபதி, உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சருக்கும், அவருடைய செயலாளருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அவரின் செயலாளருக்கும் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அனுமதி வழங்கினால் மிருகங்களைப் பலியிடுவதற்கு உடந்தையாகவிருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும்
நீதிபதி அறிவித்தார்.

மேலும், கோவில் வளாகங்களில் மிருகங்களைப் பலியிட்டால், குருக்கள் மற்றும் பரிபாலன சபையினரைக் கைது செய்யுமாறு வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோன்று, நீதவான் நீதிமன்றங்கள் மிருகங்களைப் பலியிடுவதற்கு அனுமதி வழங்குவது சட்ட முரணானது எனவும் இன்றறைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
முன்னேஸ்வரம் காளியம்மன் கோவிலில் வேள்விப் பூஜையின் போது மிருகங்களைப் பலியிடுதல் விவகாரத்தை உதாரணமாக வைத்து இந்த தடை உத்தரவைப் பிறப்பிப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment