மோட்டார்சைக்கிளில் சைலென்சர் வலது பக்கம் பொருத்துவதற்கான காரணங்கள்!

மோட்டார்சைக்கிள்கள்களில் பொதுவாக சைலென்சர் அமைப்பானது வலது பக்கமே பொருத்தப்படுகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது கிடைத்த சில தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த கேள்விக்கு சரியான பதில் கொடுக்க முடியுமா என்பது இரண்டாம் பட்சம். அதேநேரத்தில், இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது பல சுவையான வரலாற்றுத் தகவல்களும், சுவாரஸ்யமான தகவல்களும் கிடைத்தன.
நூறாண்டுகளுக்கு மேலான தொழில்நுட்ப பாரம்பரியம் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் கால ஓட்டத்தில் பல்வேறு புதுமைகளை சந்தித்துள்ளன. ஆனால், இந்த சைலென்சர் உள்ளிட்ட சில விஷயங்களில் அதிக மாற்றங்கள் இல்லை.

செயின் ஸ்ப்ராக்கெட் உள்ளிட்ட ஆக்சஸெரீகளால் இடது பக்கம் இடவசதி இல்லாமல், வலது பக்கம் பொருத்தப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்துக்களாக சொல்லப்பட்டாலும், இது உண்மையான பதிலாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எனவே, மோட்டார்சைக்கிள் வரலாற்றை ஆராய்ந்த போது, முதல் முதலில் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளில் சைலென்சர் பொருத்துவதுதான் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. ஆம், சைலென்சர் வடிவமைப்பில் மோட்டார்சைக்கிள் வடிவமைப்பு நிபுணர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துள்ளது.

அதாவது, முதன்முதலில் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களில் குறிப்பிட்ட வேகம் வரை பெடல்கள் மூலமாக மிதிவண்டி போன்று ஓட்டிச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட வேகம் வந்தவுடன், எஞ்சினில் இயங்கும்.

பெடல்கள் பொருத்த வேண்டியிருந்த சூழலால், வேறு வழியில்லாமல் எஞ்சினுக்கு கீழே சைலென்சரை பொருத்தினர். இடது, வலது பக்கம் பெடல்களும், எஞ்சினுக்கு கீழாக சைலென்சரும் பொருத்தினர். இது சிறப்பான ஐடியாவாக கருதினர்.

ஆனால், எஞ்சினுக்கு கீழாக சைலென்சரை கொடுத்ததால், மோட்டார்சைக்கிளின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் வெகுவாக பாதித்தது. அந்த காலத்தில் சமன் செய்யப்பட்ட சாலைகள் இல்லாத காரணத்தால், இந்த மோட்டார்சைக்கிள்களை மிக கவனமாக இயக்க வேண்டி இருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஓர் ஆண்டிற்குள் முழுவதுமாக எஞ்சின் சக்தியில் இயங்கும் மோட்டார்சைக்கிள்களை வடிவமைத்தனர். இதனால், பெடல்களுக்கு வேலை இல்லாமல் போனதுடன், சைலென்சர் அமைப்பிலும் மாறுதல் செய்ய திட்டமிட்டனர்.

பெடல்கள் எடுத்தவுடன் அதிக இடம் கிடைத்ததால், வலது பக்கம் சைலென்சரை பொருத்துவதே சிறந்தது என முடிவுக்கு வந்தனர். அதன்பிறகு, தரை இடைவெளி பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மேலும், முதலாம் உலகப்போரில் இந்த வலது பக்க சைலென்சர் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் பெரிதும் பயன்பட்டன.

சில தசாப்தங்கள் கழித்து, இரண்டு சிலிண்டர்கள் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் இரண்டு சைலென்சர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டார்சைக்கிளின் இருபுறத்திலும் இந்த சைலென்சர்கள் கொடுக்கப்பட்டன.

இதனால், எடை விரவல் அளவு சமமாக இருந்ததுடன், பார்ப்பதற்கும் மிகச் சிறப்பாக இருந்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் மோட்டார்சைக்கிளுக்கு கீழே சைலென்சர் கொடுக்கும் வடிவமைப்பு முறையை சில நிறுவனங்கள் கையில் எடுத்தன.

அதேநேரத்தில், இந்த இரட்டை சைலென்சர்கள் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் வளைவுகளில் திரும்பும்போது, தரையில் உரசும் பிரச்னையை சந்தித்தன. குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இந்த பிரச்னை எழுந்தது.

இந்த நிலையில், கேடிஎம், டுகாட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் எஞ்சினுக்கு கீழ்பாகத்தில் சைலென்சரை கொடுக்கும் முறையை பின்பற்றுகின்றன. ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் இரண்டு பக்கங்களிலும் சைலென்சர்களை பொருத்துகின்றன அல்லது வலது பக்க முறையை பின்பற்றுகின்றன.

மோட்டார்சைக்கிள்கள் தொழில்நுட்பமும், வடிவமைப்பு முறைகளிலும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்ட போதிலும், சில விஷயங்களில் மாற்றங்கள் செய்ய முடியவில்லை. அதில் ஒன்று சைலென்சர்.

எதிர்காலத்தில் சைலென்சர் எவ்வாறு மாறப்போகிறது என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்காது. ஏனெனில், எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் அதகரிக்கும் என்பதால், சைலென்சர் அமைப்புக்கு வழக்கொழிந்து போகும் வாய்ப்பு இருக்கிறது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment