சர்வதேச விருது பெற்றார் சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினோஜ் குமார்.

(காரைதீவு  நிருபர் சகா)

சர்வதேச விருதைப் பெற்ற இலங்கைத்தமிழரான சோமசுந்தரம் வினோஜ்குமார் தேசியமட்டத்திலும் தமது கண்டுபிடிப்புகளுக்காக தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

சர்வதேச மற்றும் தேசிய விருதுகளைப் பெற்ற அம்பாறை மாவட்டத்தின்
சம்மாந்துறையைச்சேர்ந்த இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இந்த உயர்விருதுகள் அவரது கண்டுபிடிப்புகளுக்கு கிடைத்திருக்கின்றன.
நேற்று  (26)வியாழக்கிழமை கொழும்பு பி.எம்.ஜ.சி.எச்சில் நடைபெற்ற
விருதுவழங்கல் விழாவில்வைத்து இவ்விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவற்றை விஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேம்ஜயந்த்
இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்ன  மற்றும்   உலக கண்டுபிடிப்பு
அறிவியல் புலமைச்சொத்து ஸ்தாபனப்பணிப்பாளர் கொம் கியாங்கோ இலங்கை புத்தாக்குனர்  ஆணைக்குழு ஆணையாளர் கலாநிதி மகேஸ்எதிரிசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

விஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குனர்
ஆணைக்குழுவும்  இணைந்து நடாத்திய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்
சம்மாந்துறை வினோஜ்குமாரின் 14 கண்டுபிடிப்புகள் போட்டியில் ஈடுபட்டன.

இவற்றில் இரண்டு கண்டுபிடிப்புகள்  தேசியரீதியில் தங்கப்பதக்கத்தையும்
வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டன. தங்கப்பதக்கத்துடன் ருபா 1லட்ச பணப்பரிசும் வெண்கலப்பதக்கத்துடன் 30ஆயிரம் ருபா பணப்பரிசும் வழங்கப்பட்டன. இவ்விருதுகள்  இளம்விஞ்ஞானி வினோஜ்குமாரின் தேசியரீதியிலான 30வதும் 31வதுமான விருதுகளாகும்.


சர்வதேச விருது!

இதேவேளை இவர் சர்வதேச விருதொன்றையும் இதே விழாவில் பெற்றுள்ளார். சுவிற்சலாந்தைச்சேர்ந்த உலக கண்டுபிடிப்பு அறிவியல் புலமைச்சொத்து ஸ்தாபனம் (World Invention Intellectual Property Associations(Switzerland)  இந்த விருதை வழங்கியிருக்கிறது.

உலகில் 97 நாடுகளை அங்கத்துவமாகக்கொண்ட உலக கண்டுபிடிப்பு அறிவியல் புலமைச்சொத்து ஸ்தாபனம் உலகளாவியரீதியில் நடாத்திய கண்டுபிடிப்புகள் தொடர்பாக நடாத்திய போட்டியில் ஒரே ஆண்டில் அதிகூடிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வெற்றிபெற்று சமர்ப்பணம் செய்தவர் என்ற ரீதியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி முதலிடம் பெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தை இலங்கையைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் பெற்றுள்ளார்.இவர் இந்த ஆண்டில் 14 கண்டுபிடிப்புகளைக்கண்டுபிடித்து  சமர்ப்பணம் செய்தவர். இவருக்கு வெள்ளிப்பதக்கமும் 1லட்சருபா பணப்பொதியும் வழங்கப்பட்டது.

சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச்சேர்ந்த வினோஜ்குமார் கோரக்கர்
தமிழ்மகாவித்தியாலயத்திலும் சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் பயின்று  தற்போது யாழ் பல்கலைக்ககழகத்தின் தொழினுட்பபீடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா செல்ல வாய்ப்பு!

இதேவேளை இந்த உலக விருது கிடைத்த அவருக்கு எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் ஜெனீவாவில்  நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தாக்குனர் அறிவியல் கண்காட்சியியில் கலந்துகொள்ளும் வாயப்பு கிடைத்துள்ளது. அதற்கான அழைப்பு தற்போது அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை கண்டுபிடிப்பாளர் அந்தஸ்து!

அண்மையில் இலங்கை கண்டுபிடிப்பாளர் என்ற அரச அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் 2017 ஒக்டோபர் 16ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் ''Sri Lanka Next-Blue Green Era”' '  எனும் மாநாட்டில் விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்த வழங்கி வைத்தார்.
இது பல வசதிகளை அவரது ஆராய்ச்சிக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் உதவவுள்ளது.

அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் இலவச அரச போக்குவரத்து வசதிகள் இலவச மருத்துவசேவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சி போட்டிகள் பங்குகொள்வதற்கான வசதிகள் மேலும் கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும் தேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment