மௌலவி ஆசிரியர் நியமன விடயத்தில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.


மௌலவி ஆசிரியர் நியமன விடயத்தில் இந்த அரசாங்கத்தின் கல்வி அமைச்சு மிகப்பெரிய அநீதியை மௌலவிமாருக்கு செய்துள்ளது என்பதால் இது விடயத்தில் கௌரவ ஜனாதிபதி தலையிட வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

இது பற்றி இன்று அவசரமாக கூடிய கட்சியின் உயர் சபைக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது,

1992ம் ஆண்டுக்குப்பின் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படாததால் 2005ம் ஆண்டு உருவான உலமா கட்சி அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மௌலவி ஆசிரிய நியமனத்தை முக்கிய நிபந்தனையாக முன் வைத்தது. அதனை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனாலும் உடனடியாக நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதால் உலமா கட்சியின் தொடரான போராட்டம் காரணமாக 2006ம் ஆண்டு கல்வி அமைச்சால் ஆளணி வெற்றிட தரவுகள் பெறப்பட்டன. அதன்படி 635 மௌலவி ஆசரியர்களுக்கான வெற்றிடம் இருப்பதாக அப்போது கூறப்பட்டது. அதன் பின் கிழக்கு மாகாண சபை தேர்தலை நாம் பயன் படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக 450 பேருக்கு மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படுவதற்காக 2008ம் ஆண்டு வர்த்தமாணி அறிவித்தல் வெளியாகியது. ஆனாலும் நியமனம் வழங்காமை காரணமாக உலமா கட்சி மீண்டும் போராட்டத்தில் குதித்தது. இந்த போராட்டத்தில் சில முஸ்லிம் அமைப்புக்களும் எமக்கு உதவின. மீண்டும் 2010 பொதுத்தேர்தலை முன் வைத்து நாம் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசியதன் பயனாக சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்ட போட்டிப்பரீட்சையில் 150 பேருக்கு மட்டும் நியமனங்கள் வழங்கப்பட்டன. இதற்கு காரணம் போட்டிப்பரீட்சை எவ்வாறு இருக்க வெண்டும் என்ற உலமா கட்சியின் ஆலோசனைகளை அப்போதைய கல்வி அமைச்சு கருத்திற்கொள்ளாமையாகும். 

அதன் பின் மௌலவி ஆசிரியர் நியமனத்துக்கான எமது போராட்டத்துக்கு மௌலவிமாரும், முஸ்லிம் சமூகமும் ஆதரவு தராமை காரணமாக 2010க்கு பின் இந்நியமனம் வழங்கப்படவே- யில்லை. ஆனாலும் இது பற்றி அவ்வப்போது நாம் அரசுக்கு நினைவூட்ட தவறவில்லை.

தற்போது கிழக்கு மாகாணம் போன்ற சில மாகாணங்கள் வெற்றிடம் பற்றி அறியத்தராமை காரணமாக கிழக்கு மாகாண மௌலவிமாருக்கான நியமனம் மறுக்கப்பட்டுள்ளமை மிகப்பெரிய அநியாயமாகும். இது பற்றி கவனமெடுக்கும்படி நாம் அடிக்கடி முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தும் அசிரத்தையாக இருந்து விட்டனர். அதே போல் இதற்கான முயற்சியில் எம்மோடு இணைந்து செயற்பட மௌலவிமார்களை அழைத்த போது அவர்களும் அலட்சியமாக இருந்ததன் காரணமாக இந்த அநியாயத்துக்கான பொறுப்பை கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மௌலவிமாரும் பொறுப்பேற்க வேண்டும்.

இதே வேளை 2016ம் ஆண்டு கல்வி அமைச்சால் கோரப்பட்ட ஆளணி வெற்றிட கோரிக்கையில் அநீதி இருந்தமை காரணமாகவே தாம் தரவுகளை வழங்கவில்லை என எம். ரி. ஏ . நிஸாம் குறிப்பிட்டுள்ளமை அவரது அலட்சிய போக்கை காட்டுகிறது. அவ்வாறு இருந்தால் இது விடயத்தில் அ முதல் ஃ வரை தெரிந்திருக்கும் உலமா கட்சியை அழைத்து இதனை அரசியல் மயப்படுத்தும்படி கூறியிருந்தால் இதற்கான முயற்சியை நாம் செய்திருப்போம்.

ஆக மொத்தத்தில் இந்த அரசாங்கத்தின் கல்வி அமைச்சு இது விடயத்தில் மிகப்பெரிய அநியாயத்தை செய்துள்ளதால் இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தலையிட்டு அனைத்து மாகாணங்களிலும் உள்ள மௌலவி ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கோருகிறது என முபாறக் மௌலவி குறிப்பிட்டார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment