சம்மாந்துறையில் உள்ள கைகாட்டி பிரதேசத்திற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது.

கைகாட்டி (சைன் போஸ்ட் / Signpost ) எனும் பெயர் வந்தது எப்படி...?


சம்மாந்துறை ஒரு பாரிய நகரம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் தனிப் பிரதேசங்களில் சம்மாந்துறைதான் மிகப் பெரும் பட்டினம் என்று நான் நினைக்கின்றேன்.

சம்மாந்துறை ஒரு பாரிய பிரதேசம் சுமார் 132 சதுர கிலோ மீட்டரும் 70000 மக்களும் வாழும் ஒரு நிலப் பகுதி.

தொன்மையான வரலாறும் ஆன்மீக கலாசார வரலாற்றுப் பாரம்பரியமும் உள்ள அமைதியான ஆள்புலம்.

ஆரம்பத்தில் தற்போதைய நகர்ப்பகுதிகளிலேயே மக்கள் பாரம்பரியமாகக் குடியமர்ந்திருந்தனர்.காலப் போக்கில் அவர்கள் தேவைகளின் நிமித்தம் ஊரின் பிற பகுதிகளுக்கு குடியேறினர்.

பாரிய நிலப்பரப்பாக இருந்த சம்மாந்துறையில் ஆங்காங்கே பல குடியிருப்புப் பிரதேசங்களில் தங்களது குடியிருப்பை விஸ்தரித்தவர்கள் காலப்போக்கில் அந்தப் பிரதேசங்களை அடையாள படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதனால் அடையாளப் படுத்திக் கொள்ள இலகுவாக சில அடிப்படைகளை வைத்து அந்தந்தப் பிரதேசங்களுக்கு பெயரிட்டனர்.

அப்படிப் பெயரிட்ட பிரதேசங்களும் ஒன்றுதான் கைகாட்டி என அழைக்கப்படும் பிரதேசமாகும்.

சம்மாந்துறை ஹிஜ்ரா நாற்சந்தியிலிருந்து தெற்குப் பக்கமாக நெயினாகாடு மல்கம்பிட்டி என அழைக்கப்படும் பிரதேசங்களை ஊடறுத்துச் செல்லும் பாதையில் காணப்படும் ஒரு நாற்சந்திக்கு கைகாட்டிச் சந்தி என்றும் அந்தப் பிரதேசத்தை கைகாட்டிப் பிரதேசம் என்றும் அழைப்பர்.

கைகாட்டி எனும் பெயர் வந்தது எப்படி...?

1930 ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டி முடிக்கப்பட்டு இன்றுவரை கம்பீரமாகக் காட்சி தரும் ஒரு அணைக்கட்டு இந்தப் பிரதேசத்துக்கு அண்மித்ததாய் சுமார் இரண்டு கிலோ மீட்டரில் காணப்படுகின்றது.

பைனன் எனும் ஒரு இனக்குழுவினர் இந்த அணைக்கட்டை கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.மூன்று சதுர அடி அளவுள்ள பாரிய கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இவ்வணைக்கட்டினைப் பார்க்கும் பொது இந்த இனத்தவர்கள் வலுவுள்ள மனிதர்களாக இருந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இந்த அணைக்கட்டு நிர்மாணிப்பதற்குத் தேவையான பொருட்களை இந்த அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பிரதேசமான கல்லரிச்சல் பிரதேசத்துக்கு கொண்டு செல்வதற்கு மல்கம்பிட்டி பாதை தவிர்ந்த பிரதான பாதைகள் எதுவுமே இருக்கவில்லை.

எனவே அணைக்கட்டு நிர்மாணிக்கப் படவேண்டிய பிரதேசத்திலிருந்து பாதை ஒன்றினை உருவாக்கி அதனை மல்கம்பிட்டி பாதையோடு இணைத்தனர் பிரிட்டிஷ் அரசாங்கத்தினர்.

பிரதான பாதையோடு இணைக்கப்பட்ட அந்தப் பாதையின் ஆரம்பத்தில் அணைக்கட்டு நிர்மாணிக்கப் படும் பிரதேசத்தை திசைகாட்ட ஒரு குறியீடு அமைக்கப்பட்டது.

இப்படியான குறியீட்டை ஆங்கிலத்தில் Signpost என அழைப்பார்கள்.
இதன் நேரடித் தமிழ்க் கருத்து கைகாட்டி அல்லது திசைகாட்டி அல்லது வழிகாட்டி என்பதாகும்.

ஆங்கில மொழிப்புலமை கொண்ட அக்கால சிவில் அதிகாரிகள் இதனை கைகாட்டி என மொழி பெயர்த்ததில் ஆச்சரியமில்லை அதுவே இன்றுவரை கைகாட்டி என வழங்கி வருகின்றது.

வெவ்வேறு திசைகளில் போகும் சாலைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில் ஊர்ப் பெயர் எழுதிய பலகைகளைக் கொண்ட கம்பத்தினைக் கைகாட்டி / Signpost என்று அழைப்பது வழக்கம் என்பதையும் கவனிக்கவும்.

காலத்தின் சுழற்சியில் இதனை ஹுதா நகரம் மாற்றி இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

ஏனெனில் வழிகாட்டி எனும் தமிழ் கருத்துக்கு நிகராக இதன் பெயரை நேர்வழிகாட்டி என மாற்றி விடுதல் உத்தமம்.

தகவலுக்கு நன்றி - Ranoos Muhammath Ismail
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment