எந்த முறையில் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் பல மன்றங்களைக் கைப்பற்றும்.

நேர்காணல்: கியாஸ் ஏ.புஹாரி.
நன்றி - சுடர் ஒளி பத்திரிகை.

கிழக்கில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற மு.காவின் தேர்தல் நிலவரம், வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களை அலசியவகையில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் 'சுடர்ஒளி' க்கு வழங்கிய நேர்காணல்.

கேள்வி: உள்ராட்சி சபைத் தேர்தலில் மு.கா. எவ்வாறு போட்டியிடும்?

பதில்: உள்ராட்சி சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரி முற்பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நிலையில் தற்போது உள்ராட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பல கூட்டங்களையும், கலந்தாலோசனைகளையும் நடத்தி வருகின்றNhம். இறுதி முடிவை கட்சி உயர்பீடமும் தலைமையுமே எடுக்கும். 

பெரும்பாலான உள்ராட்சி மன்றங்களை ஐ.தே.க.வுடன் இணைந்து கைப்பற்ற எண்ணியுள்ளோம். இருந்தபோதிலும் இத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவுக்கு நாங்கள் வரவில்லை.


கேள்வி: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா?

பதில்: நாங்கள் ஐ.தே.க.வுடன் இணைந்து பல பகுதிகளில் தேர்தல் கேட்டாலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் நிறைய உள்ராட்சி மன்றங்கள் எங்களது கைவசம் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் ஐ.தே.கவுடன் கூட்டிணைந்தா பயணிப்பது என்பதில் நாங்கள் கடுமையான பேச்சுவார்த்தைகளில் இருக்கின்றNhம். அவ்வாறு கூட்டமைத்து பயணித்தாலும் அதில் இயலுமான சாத்தியமான விட்டுக்கொடுப்புகளை செய்துதான், அதில் அவர்களை உள்வாங்கி பயணிக்கவுள்ளோம். அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வருவார்களேயானால் ஐ.தே.க.வுடன் கூட்டிணைவோம். அதனை தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்திலே தான் போட்டியிடும்.

கேள்வி: கடந்த காலங்களில் கிழக்கில் பல தேர்தலிலும் மு.கா. அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், தற்போது உள்ராட்சி தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் மு.கா.வின் வெற்றியிலுள்ள சாத்தியங்கள் என்ன?

பதில்: ஏற்கனவே நாங்கள் கைப்பற்றியுள்ள உள்ராட்சி மன்றங்களை கைப்பற்றுவதென்பதில் எதுவித ஐயமுமில்லை. இருந்த போதிலும் நாங்கள் தனித்து களமிறங்குவதாக இருந்தால் அதனை ஒரு சவாலாக எடுத்து வென்று காட்டுவோம்.

கேள்வி: நெடுநாள் தொட்டு இருந்து வருகின்ற விடயம்தான் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே இனமுரண்பாடு, இதனடியில் அண்மையில் கூட இறக்காமம் பிரச்சினை இடம்பெற்றது. அதே போல வட்டமடு பிரச்சினை இவற்றுக்கெல்லாம் சரியான தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: வட்டுமடு மாத்திரமல்ல வேகாம், கரங்கோ மற்றும் கரங்கா என்று பல்வேறு காணிப் பிரச்சினைகள் அம்பாறை மாவட்டத்திலே காணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தக் காணிப் பிரச்சினைகள் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றோடு இணைந்ததாகவே உள்ளது. மேலும் இந்தப் பிரச்சினைகளில் பெரும்பாலானவை குறித்த திணைக்களங்களினால் உருவான பிரச்சினை என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்ட காணிகள் தங்களுடைய எல்லைக்குள் இருப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். வட்டமடுவை பொறுத்த வரையில் தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம்சமூகத்துக்கும் இடையிலான பிரச்சினையாக இன்று காண்பிக்கப்படுகின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் நீண்ட காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மிகவும் நேர்மையாகவும்  சாதகமாகவும் முன்னெடுக்கப்பட்ட தீர்வுத்திட்ட முயற்சிகள் ஓரளவு சாத்தியமாக இருந்தாலும் இதுவரை இதற்கு சரியான வலுவான தீர்வுகள் கிடைக்கப்பெறாமை மிகவும் வேதனையளிக்கிறது. 

என்னைப் பொறுத்தவரையிலே நாங்களும் இந்த ஆட்சியின் பங்காளியாகவும், பங்குதாரர்களாகவும் இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதி, பிரதமரினால் ஒரு கொள்கை ரீதியிலான தீர்வினைத் தரவேண்டும் என்பதாகும்.


கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து தங்கள் நிலைப்பாடுதான் என்ன?

பதில்: வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் காலா காலமாக கூறப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கை வெறுமனே மனிதர்கள் வாழாத ஒரு பிரதேசம் போன்று இரு பாலை வனங்களை இணைப்பதோ அல்லது காட்டுப் பிரதேசங்களை இணைப்பதோ போன்றதாக பார்க்கப்பட முடியாது. இங்கு தொண்றுதொட்டு பூர்வீகமாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம்  மக்கள் இருக்கின்றனர். அதே நேரம் வடக்கைப் பொறுத்த வரையில் அதிகமாக தமிழ் மக்கள் வாழக்கூடிய பிரதேசம். எனவே இவ்விரண்டு மாகாணங்களும், இணைக்கப்படுமானால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியது முஸ்லிம்களே. ஏனென்றால் விகிதாசார அடிப்படையில் வட கிழக்கில் முஸ்லிம்களை விட தமிழர்களே அதிகம் காணப்படுவதால் எங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள இம் மாகாணங்கள் இணைவதை நேரடியாக அனுமதிக்க முடியாது. அவ்வாறான ஒரு மடமைத்தனமான முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்காது. 

சுருக்கமாக சொன்னால் என்னைப் பொறுத்த வரையிலே வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே வெறுமனே பேசிவிட்டு போகின்ற விடயமல்ல. பல சட்ட ரீதியான பல்வேறு கட்டங்களை தாண்டவேண்டிய சூழல் இருக்கின்றது. அவ்வாறு இணைக்க வேண்டுமென்றால் அந்த மாகாணங்களிலே வாழுகின்ற மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பை மேற்கொண்டு 23 பெரும்பான்மை எடுக்க வேண்டிய ஒரு சட்ட ஏற்பாடும் இருக்கின்றது. 

எனவே, இது இலகுவான காரியமல்ல. சிலர் தங்களுடைய அரசியல் இருப்புகளுக்காக மக்கள் மத்தியிலே பல கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து குழப்பிக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு மக்களை உணர்ச்சிபூர்வமாக தூண்டிவிடக்கூடியதல்ல. நாங்கள் நிதானமாகவே பயணித்துக்கொண்டிருக்கின்றNhம்.

எது எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களுக்கு நிறைய பாதிப்பு இருப்பதனால், நாங்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப்போவதில்லை. அதையும் தாண்டி அவ்வாறு இணைக்கப்படுமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு சாதகமான பலத்த ஒப்பந்தங்களுடன்தான் ஆதரிக்க முன்வருவோம் என்பதுதான் எமது தீர்மானமாகும்.


கேள்வி: இந்த நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் இன்னும் வன்முறை மேலோங்கிக் கொண்டே வருகிறது. இவ்வாறான விடயங்கள் அரசினால் வேண்டுமென்றே விட்டுக்கொடுக்கப்படுகின்றதா? அல்லது கடும்போக்குவாதிகளின் நாசகார செயலாக கருதுகின்றீர்களா?

பதில்: கடும்போக்குவாதிகளால் இடம்பெறுகின்ற ஒரு விடயம் என்பதில் உடன்பாடு இருந்தாலும் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற விடயங்களைத் தொட்டே இவைகள் உருவெடுக்கின்றன. இவ்வாறான இன குரோதங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் இந்த அரசாங்கம் அனுமதிக்க போவதில்லை. இது கடந்த ஆட்சியாளர்களின் தூண்டுதல்களினால் இடம்பெற்று வருகின்ற ஒரு விடயம் என்றால் அது மிகையாகாது. அண்மையில் இடம்பெற்ற கிந்தொட்ட பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் அதுகூட கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. எனவே, இந்த அரசாங்கத்தில் இவற்றுக்கு இடமில்லாத நிலையில் ஒரு சிலர் ஆட்சி அதிகாரங்களுக்காக தூண்டிவிடுகின்ற ஒரு வங்குரோத்து அரசியல் செயற்பாடு என்றே கூறமுடியும்.

கேள்வி: எதிர்வருகின்ற தேர்தல்கள் தொகுதி அடிப்படையிலும் வட்டார அடிப்படையிலும் இடம்பெறுவதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்: குறிப்பாக விகிதாசாரத்திலும் பார்க்க தொகுதிவாரியில் சிறுபான்மைக்கு பாதிப்புகள் அதிகமாகும். இதனால் எமது சமூகத்தின் இருப்பு குறைந்து செல்லும் நிலைதான் அதிகம் காணப்படுகின்றது. இந்த விகிதாசாரத்தின் மூலம் இதுவரை நாங்கள் எமது இருப்பை நாடாளுமன்றில் உறுதிப்படுத்தி வந்திருக்கின்றNhம். ஆனால் இவ்வாறானதொரு கலப்பு முறையில் எமது இனத்துக்குரிய இருப்பு குறையுமென்பதே நிச்சயித்துக் கூறக்கூடிய ஒரு விடயமாகும். அது அந்த வட்டாரங்களை நிர்ணயம் செய்த முறையிலே நிகழ்ந்த தவறு காரணமாக ஆங்காங்கே கிழக்குக்கு வெளியே முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களிலே அவர்கள் இதுவரை உறுதிப்படுத்தி வந்த ஆசனங்களை சில பிரதேசங்களில் இழக்கக்கூடிய வகையிலேயே உள்ளது. இவைகள் ஒரு புறமிருக்க சம்மாந்துறைப் பிரதேசத்தை பொறுத்த வரையிலே இடம்பெற்றிருக்கக்கூடிய நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற வட்டாரங்கள் ஒரு அறிவு பூர்வமானதாக இடம்பெற்ற ஒன்றல்ல என்றே கூறவேண்டும். இந்த வட்டார முறையின் நோக்கத்துக்கே குந்தகமேற்படுத்தும் முறையிலேதான் இந்த வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதும் ஒரு சவாலாகக் காணப்படுவதோடு ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவும் உள்ளது. 

இது அந்த வட்டார எல்லைக்குள் உள்ள மக்களை மிஞ்சிய ஒரு விடயமாகவும் உள்ள நிலையில் வருகின்ற தேர்தலில் இவ்வட்டார எல்லைப்பிரிப்பில் விடப்பட்ட தவறுகளையும் அதற்கான காரணகர்த்தாக்கள் மற்றும் காரணிகளையும் மக்கள் விளங்கிக்கொள்வர் என்பதில் எதுவித ஐயமுமில்லை. மேலும் கிழக்கில் அதிகூடிய மன்றங்களை மு.கா. கைப்பற்றும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன். 

எனவே, எது எவ்வாறாக இருந்தாலும் இத்தேர்தல்தான் அதாவது கிழக்குக்கு வெளியே சிறுபான்மையினரின் இருப்புக்களை தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடியதொன்றாக உள்ளது.


கேள்வி: மறைந்த மு.கா. தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில் அண்மையில் ஒரு விசாரணைக்குழுவினால் அறிக்கையொன்றும் வெளியானது 'அந்த சம்பவம் விமானியின் கவனயீனமே" என்றும், இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளதா?

பதில்: மறைந்த தலைவர் அஷ்ரபினது மரணம் என்பது அனைவருக்குமே இதுவரை புலப்படாத ஒரு விடயம். அவருடைய அந்திம நாட்களிலே அப்போதைய ஆட்சியில் இருந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலப்பகுதியில் அரசாங்கத்தோடு அவர் கடுமையாக குழம்பிக்கொண்டிருந்த காலகட்டத்திலேதான் இந்த அனர்த்தம் நேர்ந்திருக்கிறது. 

எனவே, இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது அந்த அனர்த்தமானது ஒரு சதியாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய கருத்தாகும். ஏனென்றால் அந்தளவு பற்றி எரிந்து விமானம் வீழ்ந்த நிலையில் கருப்புப் பெட்டி காணாமல் போவது என்பது ஒரு மாயமான விடயம். அதே நேரம் அவர் மரணம் தொடர்பில் ஒரு அறிக்கைக் குழு செயற்பட்டும் இதுவரை காலத்தில் எதுவும் வெளிப்படாத நிலையில் அண்மையில் இவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது என்பது சந்தேகத்துக்குரிய ஒரு விடயம் என்றே கூறவேண்டும். இவ்வாறான ஒரு அறிக்கை அந்த நேரத்தில் வெளியிட்டிருப்பதில் எந்தவித தடையும் இல்லை. காலம் தாழ்த்தி இது வெளியிடப்பட்டது என்பதும் இதுவரை அந்த கருப்புப்பெட்டி இல்லாத நிலையில் இந்த அறிக்கைவெளியிடப்பட்டதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தலைவர் அஷ்ரப்பின் மரணம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment