பூதங்களால் புதையுண்டு போகுமா முஸ்லீம் அரசியல் தலைமைத்துவம்?

(வேந்து)

முஸ்லீம் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. முஸ்லீம் அரசியலின் ஆரம்பமே மிகப் பெரும் பேராட்டத்துடனே உருவானது. முஸ்லீம் மறுமலர்ச்சிக்குக் காரணமாக இருந்த எம்.சீ.சித்திலெப்பை அவர்களின் பிரதிநிதித்துவம் ஈழத்து முஸ்லீம் சுதேசிகளால் வேண்டப்பட்டபோது அந்நியர்களால் அது நிராகரிக்கப்பட்டது. அந்நியர்களின் தேவையை நிறைவேற்றும் முகமாகவும் ஈழத்தின் மாற்று சக்திகளின் விருப்பத்தை நிறைவேற்றுமுகமாகவும் எம்.சீ.அப்துர் ரஹ்மான் அவர்கள் சட்டசபையில் முதலாவது உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போதே முஸ்லீம் அரசியலில் மாற்று சக்திகளின் தந்திரோபாயங்கள் வெற்றிபெறத் தொடங்கிவிட்டது. இன்றும் இந்த அரங்கேற்றம்தான் முஸ்லீம் அரசியலில் நிறைவேற்றப்படுகின்றது. 

இலங்கையின் தேசியக் கட்சிகளோடு இணைந்து கொண்ட முஸ்லீம்கள் மிகக் கச்சிதமான தலைவர்களைப் பெற்றுக்கொண்டார்கள். அந்தத் தலைவர்களின் சமூக விருப்பும் தேசிய நோக்கும் ஒன்றாகவே இருந்தது. 

அத்தலைவர்களை யாரும் வரலாற்றில் நிராகரித்துப் பேசுவதில்லை. சேர் ராசீக் பரீட், ரீ.பி.ஜயா, பதியுதீன் மஹ்மூத் வரை எந்தக் கட்சி சார்பானவர்களாக இருந்தாலும் அவர்கள் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்களாகவே போற்றப்பட்டிருக்கின்றார்கள். 

ஆரம்பத்தில் முஸ்லீம் தனித்துவ அரசியலுக்கான முஸ்தீபுகள் பல நடைபெற்றபோதும் அவை தோல்வியடைந்தே வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தை மிகச் கச்சிதமாக எம்.எஸ்.காரியப்பர், ஹலீம் இஸாக், எம்.எச்.முஹம்மட், எம்.ஈ.எச்.மஹ்ரூப், திருமலை மஜீட், ஏ.ஸி.எஸ்.ஹமீத், பீ.ஏ.மஜீட், ஏ.ஆர்.எம்.மன்சூர் போன்றவர்கள் நிறைவேற்றி வந்திருக்கின்றார்கள். 1980களில் முஸ்லீம் தனித்துவ அரசியல் சாத்தியமானபோது மேற்குறித்த தலைவர்கள் மிகக் காரசாரமாக விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால் வரலாற்றில் அவர்களின் மறைவிற்குப் பின்னர் அந்தத் தலைவர்கள் கூட உன்னதமானவர்களாவே பேசப்பட்டார்கள். இதுதான் வரலாறாக மாறியிருக்கிறது. 

முஸ்லீம் தனித்துவ அரசியலின் வருகை முன்னமே குறிப்பிட்டது போல 1960களில் முன்வைக்கப்பட்டாலும் அவை தோல்வியடைந்து 1980களில் அது சாத்தியமாவதற்கு அடிப்படையான காரணம் ஈழத்தின் அரசியல் போக்கு அல்ல, ஈழத்தின் அரசியல் சூழ்நிலை, குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலை முஸ்லீம் அரசியல் தனித்துவதற்திற்கான விருப்பினை மிக இலகுவாக தோற்றுவித்தது. அது மாத்திரமன்றி அதன் இயக்கு சக்தியாக இருந்த சிரேஷ;ட - பிரபல்யம் வாய்ந்த சட்டத்தரணி எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களின் தனித்துவமான ஆளுமையும் அதற்குக் காரணமானது. அவ்வாறே அவரது நீண்டகால அரசியல் பயணத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கான ஒரு காரணியாகவும் அது மாறியது. இந்த சூழ்நிலைகள்தான் முஸ்லீம் அரசியலை அதன் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.  

1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் அறிமுகம் இந்த முஸ்லீம் அரசியல் சூழ்நிலையை முன்கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக இருந்தது. அந்த யாப்புப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவியபோதும் முஸ்லீம் அரசியலில் அதுவொரு முக்கிய காரணியாக மாறியது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் சிறுபான்மைச் சக்திகளின் அபிப்பிராயம் முக்கிய இடம்பெறத் தொடங்கியது. அவ்வாறான சிறுபான்மை சக்திகளின் கூட்டிணைப்பில் முஸ்லீம் காங்கிரஸ் முக்கிய பங்கெடுத்தது. அதேநேரம் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தேசிய அளவில் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தினைக் கூட்டிக்கொள்வதற்கான வாய்;ப்பினையும் அது பெற்றுக்கொண்டது. இன்னொரு வகையில் விகிதாசாரப் பிரதிதிநிதித்துவம் மூலம் உருவான பாராளுமன்றத்தில் ஆட்சியை அமைப்பதற்கான சக்திக்கு முட்டுக்கொடுப்பதற்கும் சிறுபான்மை சக்திகளின் தேவையை உருவாக்கியது. இந்த சூழ்நிலைகள்தான் முஸ்லீம் அரசியலை இக்கால கட்டத்தில் முக்கியமானதொரு சக்தியாக மாற்றியது.  

1994 இல் உருவான பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக முஸ்லீம் காங்கிரஸ் மாறியபோது தேசிய அரசியலில் ஒரு பிரசித்தத்தை - ஓர் அதிர்வினை ஏற்படுத்தத்தக்க பிரசன்னத்தை அது பெற்றுக்கொண்டது. 

அமைச்சரவையின் முக்கிய உறுப்பினராக முஸ்லீம் காங்கிரஸ் மாறியது. ஜனாதிபதியின் வலது கரமாகச் செயற்படத் தொடங்கியது. அதனுடைய ஆறு வருட காலத்தின் இறுதிப்பகுதியில் அவ்வரசாங்க தலைமைத்துவத்திற்கு நீண்டதொரு விளக்கக் கடிதத்தினை எழுதுகின்ற உறவாகவே அது மாறத்தொடங்கியது. மிக யதார்த்தமான ஒரு காதலின் உள்ளிரங்க இரகசியங்களை வெளிப்படையாகப் பேசி உறவை நிலைநாட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டது. இதனுடைய சாதக, பாதகங்களை கண்டுகொள்வதற்கு முன்னர் இந்தக் கட்சி தொடர்பான மிகப்பெரிய தீர்மானத்தினை அப்போதைய மாமூல் நிலைமைக்கு அப்பால் தெய்வம் முடிவெடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. 

அக்கட்சியின் தலைவர் அஷ;ரப் அவர்களின் அகால மரணத்தோடு முஸ்லீம் அரசியல் அஷ;ரபுடைய மரணத்திற்கு முன்னர் - அஷ;ரபுடைய மரணத்திற்குப் பின்னர் என்று பேசப்படுவதற்கான ஒரு பெரிய பிரிகோட்டினை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில்தான் முஸ்லீம் அரசியல் தலைமைத்துவம் பல விஷ;வரூபம் எடுக்கின்றது. எடுத்த எடுப்பிலேயே முஸ்லீம் தேசிய அரசியல் இருப்பில் இரு தலைமைத்துவம் உருவாகியது. 

தேசியக் கட்சிகளில் இருந்துகொண்டு முஸ்லீம் தலைமைத்துவங்கள் எடுக்கின்ற நிலைப்பாட்டுக்கு அப்பால் ஒரே சமூகமாக இருந்துகொண்டு ஒரே தலைவரிடமிருந்து கிடைத்த இரண்டு தலைமைத்துவங்கள் தம்மை ஏட்டிக்குப் போட்டியான சக்திகளாகவே காட்டத் தொடங்கின. அந்த சூழ்நிலை இன்னும் பல தலைவர்களை இந்த சமூகத்திற்குள்ளே உருவாக்கியது. ஆனால் இவர்கள் அனைவரும் முஸ்லீம் காங்கிரஸ் என்ற முகாமிலிருந்து வெளியேறிய பூதங்கள்.  

முஸ்லீம் காங்கிரஸ் அரசியலில் எல்லோரையும் பங்குபற்றுனர்களாக மாற்றியது. ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்காக மாத்திரம் இருந்த அரசியல் சக்திகள் அல்லது அதிகாரம் எல்லோருக்கும் உரியதாக மாறியது. 

சமூகத்தின் சகல தரப்பட்ட பிரஜைகளையும் அது போய்ச்சேர்ந்தது. இது முஸ்லீம் கிராமங்கள் ஒவ்வொன்றிலுமே நடந்தது. எவ்வளவு தூரம் இது முக்கியமான மாற்றமோ அவ்வளவு தூரம் இது பாதகமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலில் இருந்த பக்குவம் தொலையத் தொடங்கியது. 

மனிதர்கள் அனைவருமே ஒரு பக்குவ நிலைக்கு ஆட்படுவது என்பது மிகக் கஷ;டமான விடயம். மனித குணங்கள் மாற்றமடைவது என்பது நம்பமுடியாத ஒன்று. முஸ்லீம்களின் நம்பிக்கை கூட 'பழக்கத்தை மாற்றினாலும் பரவணியை மாற்றமுடியாது' என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை முன்வைக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் மலைகள் இடம்பெயர்ந்தாலும் மனித குணம் இடம்பெயராது என்ற சொல்லுகிற மொழிகளை அறியமுடியும். மிகத் தீர்க்கதரிசனமான சாணக்கியமான அரசியல் தலைமைத்துவங்களை அல்லது பிரதிநிதித்துவங்களைப் பெறுவது என்பது கஷ;டமானது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள் என்பதற்காகவும் கட்சிக்கு அதிக பங்காற்றியவர்கள் என்பதற்காகவும் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் ஏனைய சக்திகளை உள்வாங்குவதற்கு தடையாகவே இருந்து வந்திருக்கின்றது.  

இந்த சூழ்நிலை இந்தக் கட்சியினை பலவாறாக உடைக்கத் தொடங்கியது. கட்சியிடமிருந்த தேசிய நோக்கு கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இல்லாமல் இருந்தது. பிரதேச ரீதியாக தேவைகளை நிறைவேற்றுவதற்கும் சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் கட்சியை பிளவுபடுத்துவதற்கு தயங்காத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதற்கு தலைமைத்துவமோ அல்லது பிரதிநிதிகளோ தயாராக இருக்கவில்லை. இந்த நிலைமையை அப்போதிருந்த தேசிய ஆட்சியாளர்கள் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தினார்கள். முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சி துண்டு துண்டாக உடையத் தொடங்கியது. அந்த ஒவ்வொரு துண்டிலிருந்தும் தலைவர்கள் துளிர்த்தெழுந்தார்கள். இந்த இடத்தில்தான் இந்தத் தலைமைத்துவங்கள் பற்றிய கேள்வியினை எழுப்ப வேண்டியிருக்கின்றது. 

இதிலிருக்கின்ற எந்த முஸ்லிம் கட்சிக்கும் ஒரு தூரதிருஷ;டியான பார்வை இருப்பதாக விவாதிக்க முடியாது. தமது தேவைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிகளை வரையறுத்துக் கொண்டார்கள். கட்சிகள் ஒவ்வொன்றும் உருவாக உருவாக ஆட்சியாளர்கள் மிகச் சந்தோசத்தோடு அவர்களை அங்கீகரித்து அரவணைத்துக் கொண்டார்கள். முஸ்லீம் காங்கிரசின் சங்கீதக் கதிரை விளையாட்டை ஆட்சியாளர்கள் செப்பமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆட்சியாளர்கள் இந்த சங்கீத கதிரைக்காரர்கள் ஒவ்வொருவரிடமும் மிகத் திறமையானவர்களாகச் செயற்பட்டார்கள். அவர்கள் எல்லோருமே தமக்கென்று ஒரு ஆசனத்தை சரிசெய்து கொண்டு சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டார்கள். 
சிம்மாசனம் மக்களுக்காக என்பதை விட தலைவர்களுக்காக என்று மாறியது. தனிப்பட்ட விருப்புக்களை பொது விருப்பாக மாற்றிக்கொண்டார்கள். தனிப்பட்ட வெறுப்புக்களை பொது வெறுப்பாக மாற்றிக்கொண்டார்கள். அவற்றினுடைய உச்சம் கட்சிகள் பற்றிய விருப்பையும் வெறுப்பையும் உருவாக்கியது. ஆனால் பொது விருப்பம் என்ற ஒன்று முற்றாகத் தோல்வியடைந்து விட்டது. 

இந்த சூழ்நிலைக்கு தலைவர்கள் மாத்திரம் காரணமல்ல. உறுப்பினர்களும் காரணமாக அமைந்திருக்கின்ற சங்கதியை தெளிவாகப் பேசவேண்டும். இது ஒரு மிக நீண்ட கட்டுரையாக மாறிவிடும் என்பதால் அந்த விடயத்தினைப் பற்றிப் பேசுவதை இங்கு தவிர்க்கவேண்டியிருக்கின்றது. மிக சிக்கலான விடயம் இந்த விடயத்தைப் பற்றி பேசுகின்ற போது நமக்கிருக்கின்ற ஒரு பார்வை இந்தக் கட்டுரையாளர் எந்தப் பக்கம் நின்று பேசுகின்றார் என்ற நிலைமை. 

கருத்துக்களை மாத்திரம் பார்க்கிற பண்பு நம்மிடம் உருவாகவில்லை. அந்தப் பக்குவம் உருவாகிறபொழுதுதான் ஆரோக்கியமான முஸ்லீம் அரசியலை நாம் கட்டமைக்க முடியும். நமது அரசியலுக்குள் எழுந்த சில விவாதங்களை நாம் இங்கு இதற்காக முன்வைக்க முடியும். 

பாராளுமன்ற உறுப்புரிமை தேவைப்பட்ட போது, தேசியப் பட்டடியலுக்காக தம்மை அர்ப்பணம் செய்த அரசியல்வாதிகளும் தேசியப் பட்டியலை வைத்துக்கொண்டு அதனூடாக அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டு அந்த கைமாறுக்காக கட்சிமாறுகிற அரசியல்வாதிகளும் அடுத்த வருட பட்டியலில் இடம்பெறுவதற்காக கட்சிமாறுகின்றவர்களும் கட்சியின் தேசிய நோக்கைப் புரிந்துகொள்ளாது அல்லது எதிர்பார்த்திருக்கிற சூழ்நிலைகளுக்காக அமைதிகாக்கிற போது அதனைப் புரிந்துகொள்ளாது கட்சி மாறுகின்றவர்களும் கட்சியின் தேசியப் பட்டியலை ஆண்டாண்டு காலமாக அனுபவித்துவிட்டு அது கிடைக்காத போது கட்சி மாறுகின்றவர்களுமாகத்தான் முஸ்லீம் அரசியல் உடைந்துபோனது.

இந்த சூழ்நிலைக்கு இரு தரப்பினரும் காரணமாகின்றனர். ஆனால் கட்சித் தலைமைத்துவத்தை மாத்திரம் குற்றம் சொல்லுகின்ற நிலைமை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது. அதேநேரம், பதவிகளில் நிலைத்திருக்கிற போது அவர்கள் எந்தக் குற்றத்தையும் தலைமைத்துவத்தின் மீது சுமத்துவதில்லை. பதவி கிடைக்காதபோதுதான் இந்த பழிசொல்லுகிற படலம் ஆரம்பமாகிறது. ஆகவே இது ஒரு வகையில் பதவி தொடர்பான உளநிலையோடு சம்பந்தப்பட்ட பழிகளாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.

 அது முஸ்லீம் காங்கிரசுக்கு மாத்திரம் பொருந்துவதல்ல. அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் இந்த நிலைமை இருக்கிறது. ஏன் தேசிய காங்கிரஸ் தேசிய பட்டியல் விவகாரத்தில் அன்வர் இஸ்மாயில் - பஸில் ராஜபக்ச விவகாரம் கூட அக்கட்சியிலிருந்து பலரை வெளியேற்றியது.

 நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிலும் கூட இவ்வாறான சம்பவங்கள் மாகாண சபையில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே முஸ்லீம் கட்சிகளிலேயே அதன் தலைமைத்துவத்திற்கு எதிரான கோசங்கள் அல்லது கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் பதவியினதும் அதிகாரத்தினதும் மீதான உளநிலையின் பிறழ்வாகவே முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இங்கு தலைமைத்துவங்கள் மீதான யதார்த்தமான விமர்சனம் வெளிப்படுத்தப்படவில்லை என்பதுதான் விவாதிக்க வேண்டிய விடயம். 

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நமது கட்சித் தலைமைத்துவங்கள் பற்றி கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. அதன் நிதானமான போக்கு, எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனமான வெளிப்பாடு, கட்சியைக் காப்பாற்றுவதற்கான உத்திகள், இராஜதந்திர அரசியல் நகர்வுகள் முதலானவற்றைக் கொண்டு நமது தலைமைத்துவங்களை சிந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் வந்திருக்கின்றோம். வெறும் பண பலம், சனங்களை கையாள்வதற்கான ஜாலங்கள், பிரதேச ரீதியாகவும் இன ரீதியாகவும் முன்வைக்கப்படுகிற காய்நகர்த்தல்கள்,   குறுகிய கால தீர்வுக்கான வழிமுறைகள் இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ளாது பெரும்பான்மை கோசங்களோடு இணைந்துபோகிற உள்ளோடி ஆராய்ந்து பார்க்காத ஊடகக் கலாசாரம் என்பவனவற்றால் நமது தலைமைத்துவங்களை இழக்க வேண்டிய அப்பாவித்தனமான பயணங்களை நாம் வெற்றிகரமாக மேற்கொள்கின்றோம் என்பதுதான் உள்ளுணர்ந்து பார்க்கிறபோது தெரிகிற யதார்த்தமாகும். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment